இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் 6 விக்கெட்களை இழந்த தென்னாப்பிரிக்கா!
INDvSA 2nd test cricket
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (நவம்பர் 22, சனிக்கிழமை) தொடங்கியது. முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்ததால், இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் தென்னாப்பிரிக்கா, இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
தென்னாப்பிரிக்கா முதல் நாள் ஆட்டம்
தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களான மார்க்ரம் மற்றும் ரிக்கல்டன் ஆகியோர் நிதானமான ஆட்டத்தைத் தொடங்கினர்.
முதல் செஷன்: முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியைப் பும்ரா பிரித்தார். மார்க்ரம் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ரிக்கல்டன் 35 ரன்களில் வெளியேறினார். முதல் நாள் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது.
இரண்டாம் செஷன்: உணவு இடைவேளைக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பொறுப்புடன் விளையாடிய கேப்டன் பவுமா 41 ரன்களிலும், ஸ்டெப்ஸ் 49 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த முல்டர் (13) மற்றும் டோனி டி சோர்ஸி (28) ஆகியோர் வெளியேறினர்.
ஆட்ட நேர முடிவில்..
போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது. ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பான முறையில் பந்துவீசி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.