இந்தியாவின் வெற்றிதான் முக்கியம்! அணியின் நலனுக்காக நான் இதையும் செய்ய தயார்! பேட்டிங் ஆர்டர் மாற்றம் குறித்து – திலக் வர்மா பேச்சு
India victory is important I am ready to do this for the good of the team Regarding the change in the batting order Tilak Verma speech
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தி வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்ததால், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி “வாழ்வா–சாவா” நிலைக்கு தள்ளப்பட்டது.
அத்தகைய கட்டாய சூழலில் களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்து அதிரடி காட்டியது. 257 ரன்கள் என்ற கடின இலக்குடன் பதிலளித்த ஜிம்பாப்வே அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தினார். வழக்கமாக மூன்றாம் இடத்தில் களமிறங்கும் அவர், இந்த ஆட்டத்தில் ஆறாவது வீரராக இறங்கி 16 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உதவியுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது வேகமான இன்னிங்ஸ் இந்திய அணியின் மொத்த ரன்களை உயர்த்த முக்கிய காரணமாக அமைந்தது.
போட்டிக்குப் பிறகு பேசிய திலக் வர்மா, கடந்த ஒரு ஆண்டில் அணியாக செய்த தவறுகளை ஆய்வு செய்து, இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாட முடிவு செய்ததாக தெரிவித்தார். “அணி என்ன ரோல் கொடுத்தாலும் அதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக பின்வரிசையில் விளையாடி வருகிறேன். அதனால் அந்த நிலை எனக்கு புதிதல்ல. அணியின் ரன் வேகத்தை உயர்த்த வேண்டும் என்பதே என் நோக்கம்” என்றார்.
எந்த பந்து வந்தாலும் அதை பவுண்டரிக்குத் தள்ள வேண்டும் என்ற மனப்பாங்குடனே களமிறங்கியதாகவும் அவர் கூறினார். திலக் வர்மாவின் இந்த அதிரடி ஆட்டம், இந்திய அணியின் நடுப்பகுதி மற்றும் பின்வரிசை பலத்தை வெளிப்படுத்தியதுடன், தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.
English Summary
India victory is important I am ready to do this for the good of the team Regarding the change in the batting order Tilak Verma speech