இந்தியா–பாகிஸ்தான் மோதல்: அர்ஷ்தீப்புக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் ஆடனும்– சுனில் கவாஸ்கர் சொன்ன காரணம்
India Pakistan clash Sunil Gavaskar reveals why Washington Sundar Adan should replace Arshdeep
2026 டி20 உலகக் கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஏ பிரிவில் இடம்பெற்று தனது முதல் இரண்டு லீக் போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. அடுத்ததாக, பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள முக்கியமான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதும் இந்தியா–பாகிஸ்தான் அணிகளின் ஆட்டம் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும். இம்முறையும் அதே பரபரப்பு நிலவுகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில், முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் அணித் தேர்வில் மாற்றம் செய்ய வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
“கொழும்பு மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும். பும்ரா மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் வேகப்பந்து வீச்சுக்கு போதுமானவர்கள். தேவையெனில் ஷிவம் துபேவையும் பயன்படுத்தலாம். ஆனால் வாஷிங்டன் சுந்தரை சேர்த்தால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பார்கள். இது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்,” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், வாஷிங்டன் சுந்தர் எட்டாம் இடத்தில் இறங்கி பயனுள்ள ரன்கள் சேர்க்கும் திறன் கொண்டவர் என்பதால், அவர் அணியின் சமநிலையை மேம்படுத்துவார் என்றும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணித் தேர்வு நிர்வாகம் எந்த முடிவை எடுக்கிறது என்பது ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா–பாகிஸ்தான் மோதல் மீண்டும் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்க்கும் போட்டியாக அமையும் என்பது உறுதி.
English Summary
India Pakistan clash Sunil Gavaskar reveals why Washington Sundar Adan should replace Arshdeep