நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ஹர்ஷித் ராணாவை விட இவர்தான் பெஸ்ட்! அவரை பர்ஸ்ட் விளையாட வையுங்க – ராபின் உத்தப்பா கருத்து
He is better than Harshit Rana in the New Zealand ODI series Let him play first Robin Uthappa opinion
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஜனவரி 11ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வடோதரா நகரில் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாட இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இளம் வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணியுடன் இந்தியா இந்த தொடரை சந்திக்க உள்ளது. அந்த வகையில் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த தொடரில் முகமது சிராஜ் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக செயல்படவுள்ள நிலையில், அவருடன் இணைந்து விளையாடப்போகும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அணித் தேர்வில் இந்திய அணி ஹர்ஷித் ராணாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருவதால், அவரே சிராஜுடன் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆனால் இதற்கு மாறாக, முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா, ஒருநாள் போட்டிகளில் ஹர்ஷித் ராணாவை விட அர்ஷ்தீப் சிங் தான் சிறந்த தேர்வு எனக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஹர்ஷித் ராணா ஒரு நல்ல பந்துவீச்சாளர் தான். ஆனால் அவர் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடியவர் என்பதற்காக இந்திய அணி அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்குகிறது. ஆனால் பந்துவீச்சுத் திறனில் பார்த்தால் அர்ஷ்தீப் சிங் மிகச் சிறந்தவர்” என்று கூறினார்.
மேலும், “அர்ஷ்தீப் சிங் பெரிய அதிரடி பேட்டிங் செய்ய முடியாவிட்டாலும், தேவையான அளவு பேட்டிங் செய்யக்கூடியவர். இந்திய அணியில் அக்சர் பட்டேல் வரை பேட்டிங் ஆழம் இருப்பதால், முழுநேர முதன்மை வேகப்பந்து வீச்சாளராக ஹர்ஷித் ராணாவை விட அர்ஷ்தீப் சிங் தான் சரியான தேர்வு” என ராபின் உத்தப்பா விளக்கினார்.
இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி எந்த வேகப்பந்து வீச்சாளர் கூட்டணியை தேர்வு செய்யும் என்பது, முதல் போட்டியிலேயே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
He is better than Harshit Rana in the New Zealand ODI series Let him play first Robin Uthappa opinion