குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!
VIDYARAMBAM SADANGU FOR BABY
வித்யாரம்பம் சடங்கு:
குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவுடன் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. 'அக்ஷராப்பியாசம்" என்பதற்கு தமிழில் 'எழுத்தறிவித்தல்" என்று பொருள் கொள்ளலாம். அதாவது பிறந்து 2 வயதிற்கு மேலான குழந்தைகள் முறையான பள்ளி கல்வி கற்பதற்கு முன்பு செய்யப்படும் ஒரு சடங்காகும். இதை 'வித்யாரம்பம்" என்றும் கூறுவர்.
இந்து மதத்தவர்கள் செய்ய வேண்டிய 16 வகையான முக்கியமான சம்ஸ்காரம் எனப்படும் சடங்குகளில் இந்த வித்யாரம்பம் சடங்கும் ஒன்று. பொதுவாக இந்த வித்யாரம்பம் சடங்கு கோயில்களில் விநாயகர், சரஸ்வதி தேவி தெய்வங்களை பூஜித்து வேதமறிந்த அந்தணர்கள் கொண்டு செய்யப்படுகின்றன. இந்த வித்யாரம்பம் சடங்கு எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
எந்த நாளில் செய்யலாம்?
உங்களின் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் சடங்கு செய்ய நவராத்திரி காலத்தில் வரும் 'விஜயதசமி அல்லது சரஸ்வதி பூஜை" தினங்களே மிகவும் சிறப்பானது. வசந்த பஞ்சமி, தமிழ் புத்தாண்டு, குரு பூர்ணிமா, ஆவணி பௌர்ணமி ஆகிய தினங்களும் வித்யாரம்பம் செய்வதற்கு சிறந்த தினங்களாகும்.
எப்படி செய்வது?
வித்யாரம்பம் செய்யும் தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து உங்கள் குழந்தையை நீராட செய்து, புத்தாடை உடுத்த வேண்டும். பூஜைக்கு தேவையான மஞ்சள், குங்குமம், தேங்காய், சந்தனம், பத்தி, கற்பூரம், மலர்கள், மலர்மாலை, 1 கிலோ அரிசி, வெற்றிலை, பாக்கு, நைவேத்தியத்திற்காக சர்க்கரை பொங்கல் அல்லது பாயாசம், குழந்தை எழுதுவதற்கான பலகை, பல்பம், நோட்டு புத்தகம், பேனா போன்றவற்றை தயார் செய்து கோயிலுக்கு பூஜை ஆரம்பிக்கும் நல்ல நேரம் தொடங்குவதற்கு முன்பாக முடிந்த அளவு சீக்கிரமாக செல்வது நல்லது.
கோயிலுக்கு சென்று வித்யாரம்பம் சடங்கு மேற்கொள்ளும் இடத்தில் நீங்கள், உங்கள் குழந்தை மற்றும் உறவினர்கள் சென்று அமர்ந்து கொள்ள வேண்டும். ஒரு தட்டில் அரிசியை முழுவதுமாக தூவி வைக்க வேண்டும்.
பிறகு கோவிலில் உள்ள குரு குழந்தையின் காதில் சரஸ்வதி மற்றும் பிரணவ மந்திரத்தை ஓதி, அக்குழந்தைகளின் கையை பிடித்து அரிசி நிறைந்திருக்கும் பலகையில் 'ஓம்" என்கிற எழுத்தை எழுத வைத்து ஆசீர்வதித்து அனுப்புவார்.
கோயிலில் செய்ய முடியாத பட்சத்தில் வீட்டில் குழந்தையை அப்பா, தாத்தா அல்லது தாய்மாமாவின் மடியில் உட்கார வைத்துக்கொள்ள வேண்டும். அரிசியை முழுவதுமாக தூவி தட்டில் குழந்தையின் கையைப் பிடித்து 'அ" எனும் முதல் எழுத்தை எழுதி பயிலலாம். பிறகு அடிப்படையான எழுத்துக்களையும், எண்களையும் கற்றுத் தரலாம்.
எவ்வாறு வந்தது?
குழந்தைகள் பிறந்தது முதலே இந்த உலகில் தாம் காண்பவற்றைக் கற்று வருகின்றன. கல்வியாக நாம் வீட்டில் சின்னச் சின்னப் பாடல்கள், கதைகள், எழுத்துக்களை உச்சரித்தல் என்று சொல்லித் தருவோம். ஆனால், குழந்தை ஐந்து வயதைத் தொட்டதும் அதற்கு முறையான கல்வியைத் தொடங்க வேண்டும்.
அவ்வாறு தொடங்கும் கல்வி அதன் வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும். எனவே முதன்முதலில் கல்வி கற்கத் தொடங்கும்போது இறைவனை வழிபட்டுத் தொடங்குவது சிறப்பானது. அவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைக்கு இறைபக்தி உண்டாகும். கற்கும் கல்வியும் இறைவடிவமே என்பதை உணரும். இதற்காகவே வித்யாரம்பம் என்னும் எழுத்தறிவித்தலை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர்.
பலன்கள் :
இச்சடங்கை குழந்தைகளுக்கு செய்வதால் கல்வி கடவுளான சரஸ்வதி தேவியின் அருள் குழந்தைகளுக்கு கிடைக்கப்பெற்று, அவர்கள் கல்வி மற்றும் கலைகளில் சிறந்தவர்களாக பரிணமிக்க செய்கிறது. விநாயக பெருமானின் அருளால் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த கல்வி மற்றும் செல்வம் பெற்று வாழ்வில் மேன்மையடைகின்றனர்.
English Summary
VIDYARAMBAM SADANGU FOR BABY