நாபியில் பிரம்மன்.. தலையில் சூரியன்.. ஆராவமுதன் ஆழ்வார்.. அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்.!
Today special sarangabani temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் என்னும் ஊரில் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
தஞ்சாவூரில் இருந்து சுமார் 44 கி.மீ தொலைவில் கும்பகோணம் உள்ளது. கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தலத்தின் மூலவரான சாரங்கபாணி, கோமளவல்லி மற்றும் மகா லட்சுமியுடன் அருள்பாலிக்கிறார். சாரங்கபாணி நாபியில் பிரம்மனும், தலையில் சூரியனும் கொண்டு காட்சி தருகிறார்.
இத்தலம் முழுவதும் நரசிம்ம அவதாரம் பெற்ற சிலைகள் மிகவும் கலை நயமாக செதுக்கப்பட்டு உள்ளது.
தாயாரை மணந்துகொள்ள இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்ததால் மூலவரின் சன்னதி தேர் அமைப்பில் இருக்கிறது. இவற்றின் இருபுறங்களிலும் உத்ராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன.
ஆழ்வார்கள் பாடல்களை தொகுக்க இத்தலத்து சாரங்கபாணி காரணமாக இருந்ததால் இவருக்கு 'ஆராவமுதன் ஆழ்வார்" என்ற பெயரும் உண்டு.
உற்சவர், மூலவரின் பொறுப்பில் இருந்து உபயமாக (அவருக்கு பதிலாக) செயல்படுவதால் இத்தலம் உபய பிரதான திவ்ய தேசம் எனப்படுகிறது.
மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷமாகும். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது.
வேறென்ன சிறப்பு?
12 ஆழ்வார்களால் நளாயிர திவ்ய பிரபந்தத்தில் மதிக்கப்படும் 108 திருக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
பொதுவாக பெருமாள் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் சங்கு, சக்கரத்துடன சேர்த்து சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார்.
திவ்ய தேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால், இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது.
பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு உத்தான சயன கோலத்தில் பள்ளிகொண்டிருக்கிறார்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
இக்கோயிலில் சித்திரை திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசி மாதத்தில் வசந்த உற்சவம், மாசியில் மாசி மகம் தெப்ப உற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
இத்தல மூலவரிடம் பிரார்த்தனை செய்தால் வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special sarangabani temple