தினம் ஒரு திருத்தலம்.. பஞ்சமுக விநாயகர்.. அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில்.! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலம் என்னும் ஊரில் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

தூத்துக்குடியில் இருந்து சுமார் 19 கி.மீ தொலைவில் ஆறுமுகமங்கலம் என்னும் ஊர் அமைந்துள்ளது. ஆறுமுகமங்கலத்தில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல மினி பஸ் வசதியும், ஆட்டோ வசதியும் உண்டு.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

கருவறையில் விநாயகப்பெருமான், நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறார். ஆயிரத்தெட்டாவது அந்தணராக வந்த விநாயகப்பெருமான் என்பதால் ஆயிரத்தெண் விநாயகர் என்ற பெயரில் காட்சித் தருகிறார்.

விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும்.

திருக்கோயில் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், சிவன், அம்மை, கோஷ்ட விநாயகர், வள்ளி, தெய்வானை உடனான சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் மற்றும் நவகிரகங்கள் ஆகியோர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள்.

வேறென்ன சிறப்பு?

திருவாவடுதுறை ஆதீனத்தால் கொடிமரம், தேர் மற்றும் உற்சவ மூர்த்திகள் தரப்பட்டன.

தனி சன்னதியில் தெற்கு நோக்கி காட்சித் தருகிறார் பஞ்சமுக விநாயகர். இவர் ஐந்து முகங்கள் கொண்டு நின்ற கோலத்தில் அபூர்வ திருமேனியாக காட்சித் தருகிறார்.

இராஜ கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் கொடி மரம், பலி பீடம், மூஷிக வாகனம் ஆகியன கருவறைக்கு நேர் எதிராக அமையப்பெற்றுள்ளது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

இங்கு சித்திரை மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பிரம்மோற்சவ பெருந்திருவிழா நடைபெறும். ஏழாம் நாளன்று பஞ்சமுகத்துடன் கூடிய ஹேரம்ப கணபதி நடராஜருடன் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், திருமணத்தில் தடை இருந்தாலும், படிப்பில் குறைபாடு இருந்தாலும், வழக்குகளில் இழுபறி இருந்தாலும், மோட்டார் வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும், பணப்பிரச்சனை தீரவும் இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் வேண்டிய பிரார்த்தனைகள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை.

வீடு கட்ட, திருமண வேலைகளை ஆரம்பிக்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, வியாபாரம் ஆரம்பிக்க என நாம் எந்த காரியம் தொடங்கினாலும் இக்கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்யலாம்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

வேண்டுதல்கள் நிறைவேறியதும் 108, 1008 தேங்காய்களை உடைத்து, அத்துடன் 108 தீபம் ஏற்றி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today special Arumugamangalam Ayirathen temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->