வருகிறது பௌர்ணமி... அன்னாபிஷேகத்தை காண... கண் கோடி வேண்டும் அல்லவா?
sivan annabhishekam
உலகெங்கும் சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (12.11.2019) அன்று அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அன்னப்பருக்கையிலும் சிவரூபம் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடைபெறுகிறது.
தஞ்சாவூர் பெரியக்கோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் டன் சாதத்தால் அலங்கரித்து அந்த உணவை பிரசாதமாக கொடுப்பார்கள்.

தமிழகத்தின் முக்கிய ஆன்மீக தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகமும் ஒன்று.
யார் யாருக்கு அன்னதோஷம் ஏற்படும்?
பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்காதவர்களையும், வயதானவர்களையும், கர்ப்பிணிகளையும் சாப்பிடவிடாமல் தடுப்பவர்களையும் அன்னதோஷம் பிடிக்கும். பந்தியில் சாப்பிட உட்கார்ந்தவர்களை எழுப்புவதும் பாவமாகும்.
தான் சாப்பிட்டது போக ஏராளமான உணவு கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்களுக்கும், உணவுகளை வீணாக்குபவர்களுக்கும் அன்னதோஷம் ஏற்படும்.

பெற்றவர்களுக்கு உணவு கொடுக்காதவர்களையும், பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களையும் அன்னதோஷம் பிடிக்கும்.
அன்னதோஷத்தாலும், அன்ன துவேஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஐப்பசி பௌர்ணமி நாளில் அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமானை தரிசனம் செய்வது மிகவும் நல்லது.
அன்னாபிஷேக தரிசனம் :
அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி (பச்சரிசி) வாங்கி கோவிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்து பேருக்கு அன்னதானம் செய்வது போன்றவற்றை செய்யலாம்.
ஸ்ரீ அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாகுவது குறையும். மேலும், உணவு தட்டுப்பாடின்றி கிடைக்கும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று உங்களது குறைகளை நீக்கி நலமுடன் வாழுங்கள்.