குழந்தை வரம் அருளும் சஷ்டி விரதம்.! வாழ்வில் வளம் பெற... முருகனை வழிபடுவோம்..!!
sashti viratham 2022
விரதம் மேற்கொள்வதால் நம் வாழ்க்கையில் இழந்த எல்லாவற்றையும் மீண்டும் பெற முடியும். அதேசமயத்தில் நமக்கு கிடைக்க வேண்டியவை கிடைக்காமல் தாமதமானால் அதையும் விரதத்தின் மூலமாக சரி செய்யலாம். ஏதாவது தேவைகள் இருந்தால் மட்டும்தான் விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை, நம்முடைய பக்தியை கடவுளிடம் காட்டுவதற்காகவும் விரதத்தை மேற்கொள்ளலாம்.
சஷ்டி விரதம் எப்போது மேற்கொள்ள வேண்டும்?
சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் ஒரு நாளை குறிக்கிறது. இந்த நாட்கள் பொதுவாக திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.

அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி ஆகும். அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியை சுக்லபட்ச சஷ்டி (அ) வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்துவரும் சஷ்டி கிருஷ்ணபட்ச சஷ்டி (அ) தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.
புனிதமான விரதம் :
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும். அத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று சஷ்டி விரதம்.
திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் :
ஒருவரின் வாழ்க்கை முழுமை அடைய வேண்டுமென்றால் அவர் திருமணம் செய்ய வேண்டும், அதேபோல் அவரின் திருமண வாழ்க்கை முழுமை அடைய வேண்டுமென்றால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். இது இரண்டிலும் ஏதேனும் தடங்கல் இருந்தால் கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதால் இந்த தடைகளை விலக்கி மிக விரைவில் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சஷ்டி விரதம் மிகப்பெரிய விரதமாகும். திதிகளில் சஷ்டி விரதம் ஆறாவதாக வருவதால் அதற்கு மிக வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தை தரக்கூடியது ஆறு என்பது ஜோதிட வழக்கில் உள்ளது. ஜோதிடத்தில் ஆறு என்ற எண் சுக்கிரனை குறிக்கிறது. இது லட்சுமி அம்சமாக கருதப்படுகிறது.

செல்வமும், முருகனின் அருளும் :
சஷ்டி விரதத்தை நாம் சரியாக மேற்கொண்டால் செல்வம் என்று கருதப்படும் நிலம், சொத்துக்கள் மற்றும் தொழில்கள் நாம் எதிர்பார்த்ததைவிட வளமாக அமையும். திருமணம், வாகனம், வீடு என அனைத்தையும் தர உதவுவது சுக்கிரன்தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் இது அனைத்தையும் பெறமுடியும்.
இது அனைத்திற்கும் மேலாக நாம் எதை தொடங்குவதாக இருந்தாலும் அல்லது புதிதாக வேலைக்கு செல்வதாக இருந்தாலும் சஷ்டி விரதத்தை மேற்கொண்டு அதன்பிறகு இதுபோன்ற சுபகாரியங்களை செய்வதன் மூலமாக நீங்கள் செய்யும் செயல் எப்போதும் நன்மையாகவே முடியும். எனவே சஷ்டி விரதத்தின் பெருமையை அறிந்து ஒவ்வொரு மாதமும் இந்த விரதத்தை மேற்கொள்வது புனிதமான செயலாகும்.