சபரிமலை கோவில் தங்க மோசடி: முன்னாள் நிர்வாகிகள் உட்பட 10 பேர் கைது...! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோவில், திருப்பதிக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தரும் உலகப் புகழ்பெற்ற புனித தலமாக விளங்குகிறது.

இந்நிலையில், அந்தக் கோவிலிலிருந்து தங்கம் அபகரிக்கப்பட்டதாக வெளியான தகவல், நாடு முழுவதும் உள்ள அய்யப்ப பக்தர்களை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது. மேலும், கோவில் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களே இந்த மோசடியில் தொடர்புடையதாக தெரியவந்தது, பக்தர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை கேரள உயர் நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு (SIT), இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. விசாரணையின் போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிச்சத்திற்கு வந்தன.சபரிமலை கோவிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளை, செம்புத் தகடுகள் எனக் காட்டி போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதும், அந்த தங்கம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இந்த முறைகேட்டில் கோவில் நிர்வாகம், நகை வியாபாரிகள் மற்றும் வெளியூர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தங்க அபகரிப்பு வழக்கில், உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டின் இரண்டு முன்னாள் தலைவர்கள், ஒரு முன்னாள் உறுப்பினர், முன்னாள் உயர் அதிகாரிகள், சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் ‘ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நகை வியாபாரி கோவர்தன் உள்ளிட்ட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், தேவஸ்தான முன்னாள் தலைவர் பத்மகுமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வழக்குடன் தொடர்புடைய சிலர் இன்னும் விசாரணை வளையத்துக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தங்க அபகரிப்பு விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றிருக்கலாம் என சிறப்பு விசாரணை குழு நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 19-ஆம் தேதி இந்த வழக்கு அமலாக்கத் துறைக்கு (ED) மாற்றப்பட்டது.

இருப்பினும், சிறப்பு விசாரணை குழு தனது விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, கடந்த 9-ஆம் தேதி காலை சபரிமலை அய்யப்பன் கோவிலின் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவருவை சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர்.

தேவஸ்தான முன்னாள் தலைவர் பத்மகுமார் மற்றும் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போத்தி ஆகியோருக்கு, இந்த மோசடியில் உதவியவர் தந்திரி ராஜீவரே என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை, ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவரும் தங்களது வாக்குமூலங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர்.மேலும், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தங்க மோசடி வழக்கில், திருவாங்கூர் தேவசம் வாரியத்தின் முன்னாள் உறுப்பினரான கே.பி. சங்கரதாஸ் என்பவரையும் சிறப்பு விசாரணை குழு கைது செய்துள்ளது.

கடந்த சில நாட்களாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மருத்துவமனையிலேயே கைது செய்யப்பட்டதாக கேரள போலீசார் உறுதிப்படுத்தினர். இதனை கொல்லம் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.தேவஸ்தான முன்னாள் தலைவர் பத்மகுமார் பதவிக்காலத்தில், சங்கரதாஸ் நிர்வாக குழு உறுப்பினராக பணியாற்றியிருந்தார்.

அந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட நிர்வாக முடிவுகள், தங்கம் காணாமல் போன சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொத்தமாக, நன்கொடையாக கிடைத்த 30.3 கிலோ எடை கொண்ட தங்கத்தில், சுமார் 4.54 கிலோ தங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு, கோவில் நிர்வாக வரலாற்றில் மிகப்பெரிய சர்ச்சைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sabarimala temple gold scam 10 people including former officials arrested


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->