புரட்டாசி மாதம்... புதிய தொழில், வியாபாரங்கள் ஏன் தொடங்கப்படுவதில்லை?
purattasi month special 6
பெருமாள் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது 'புரட்டாசி" மாதத்தில் விரதமிருந்து அவரை வழிபடுவதுதான். விரதமிருந்து வழிபடும் பக்தர்கள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவராக இருக்கும் பெருமாளை வழிபடும் தெய்வீகமான மாதம்தான் இந்த புரட்டாசி மாதம்.
புரட்டாசி மாதத்தில் புதிய தொழில், வியாபாரங்கள் ஏன் தொடங்கப்படுவதில்லை?
வீட்டில் எந்தவொரு சுபகாரியமாக இருந்தாலும், அதை செய்வதற்கு நல்ல நாள், நல்ல நேரம், நன்மை தரும் மாதங்கள் என்று பார்த்து பார்த்து செய்வதை வழக்கமாக நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள்.
புரட்டாசி மாதம் என்பது சூரியன் 'கன்னி" ராசியில் பிரவேசிக்கும் காலம் ஆகும்.
'கன்னி" ராசி பெருமாளுக்குரிய ராசியாகும். எனவே இந்த மாதம் முழுவதும் பெருமாளை விரதம் இருந்து வழிபட்டு நம்மிடம் இருக்கும் தீயவைகளை அழிக்கின்ற ஒரு மாதமாக கருதப்படுகிறது.
ஜோதிட ரீதியாக பார்க்கும் போது 'மிதுன ராசியில் வரும் ஆடி மாதம், கன்னி ராசியில் வருகின்ற புரட்டாசி மாதம், தனுசு ராசியில் வருகின்ற மார்கழி மாதம், மீன ராசியில் வருகின்ற பங்குனி மாதம்" ஆகிய நான்கு மாதங்களும் 'அழித்தல்" அதாவது நம்மிடம் இருக்கும் தீயவைகளை அழிக்க இறைவழிபாடு, விரதம் போன்றவற்றை மேற்கொள்ளும் மாதங்களாக கூறப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த மாதங்களில் புது தொழில், வியாபாரங்கள் போன்றவற்றை தொடங்கினால் அவை மேன்மையடையாமல் நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்கிற அனுபவரீதியான ஜோதிட கணிப்புகள் காரணமாகவும், மேற்கூறிய நான்கு மாதங்களில் குறிப்பாக 'புரட்டாசி" மாதத்தில் புதிய தொழில்கள், வியாபாரங்கள் போன்றவற்றை தொடங்காமல் இருக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
ஆனால் இந்த புரட்டாசி மாதத்தில் புதிதாக தொழில், வியாபாரங்களை தொடங்குவதற்கான முன் தயாரிப்புகளில் ஈடுபடலாம்.
புரட்டாசி மாதத்தில் புதிய வீட்டில் குடியேறாததற்கான காரணங்கள் :
பெருமாளை வழிபடும் தெய்வீகமான புரட்டாசி மாதத்தில் 'கிரகப்பிரவேசம்" அல்லது 'புதுமனை புகுவிழா", வேறு புதிய வீட்டிற்கு மாறி செல்லுதல் போன்ற சுபகாரியங்கள் செய்யப்படுவதில்லை.
தனது மிகப்பெரும் பராக்கிரமத்தால் பூலோகம் மற்றும் தேவலோகத்தை வென்று அக்கிரமங்கள் பலவற்றை செய்து வந்தவன் அசுர குல மன்னன் 'இரணியகசிபு".
இரணியகசிபுவின் அதர்ம செயல்களை தடுக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் திருமாலின் மாதமாகிய இந்த புரட்டாசி மாதத்தில்தான் 'நரசிம்ம அவதாரம்" எடுத்து, இரணியகசிபுவை அவனது சொந்த அரண்மனையிலேயே பெருமாள் வதம் புரிந்தார்.
மேலும் இந்த புரட்டாசி மாதம், சூரியன் 'கன்னி" ராசியில் பெயர்ச்சியாகி தென்திசையை நோக்கிய தனது பயணத்தை தொடங்கும் மாதமாக இருக்கிறது. தென்திசை என்பது 'எமதர்மன்" இருக்கும் திசையாகும். மறைந்த நம் முன்னோர்களை வழிபடுவதற்குரிய திசையாகும்.
இந்த புரட்டாசி மாதத்தில்தான் பித்ருக்களை வழிபடுவதற்கு சிறந்த தினமான 'மகாளய அமாவாசை" தினமும் வருகிறது. மோட்ச பதவியை அளிக்கும் நாராயணனை விரதமிருந்து வழிபடுவதற்கும், மறைந்த நமது முன்னோர்களை வழிபடுவதற்கும் சிறந்த மாதமாக புரட்டாசி மாதம் இருப்பதால் சுப நிகழ்ச்சிகள் செய்வதை தவிர்க்கின்றனர்.
English Summary
purattasi month special 6