கோலாகலமாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரம்! யாருக்கெல்லாம் இன்று நன்மை கிடைக்கும்?
panguni uthira festival
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது. மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வரும், ஆனால் பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பனிரெண்டாவது மாதமான பங்குனியும், பனிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளே பங்குனி உத்திரமாகும்.
பங்குனி உத்திர தினத்தில் தான், அதிக தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகிறது. எனவே நீண்ட காலங்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், பங்குனி உத்திர விரதத்தைக் கடைபிடித்தால், உடனடியாக திருமணம் நடைபெறும். திருமணமாகி பிரிந்த தம்பதியினர் இந்தநாளில், விரதம் இருந்து, முருகப்பெருமானை வழிபட்டால். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.

பங்குனி உத்திர தினத்தில், அணைத்து கோயில்களிலும் விழாக்கள் நடைபெறும். ஆனால் முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய ஒரு விஷேஷ தினமாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது. ஏனென்றால் பங்குனி உத்திர தினத்தில் தான் முருகப்பெருமான் தெய்வானையை மணந்தார். எனவே முருகன் கோயில்களில் முருகன் திருக்கல்யாண வைபவங்கள் மிகச்சிறப்பாக நடைபெறும்.
சிலரால் கோவிலுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், பங்குனி உத்திர தினத்தில், அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு உங்கள் வீட்டிலிருக்கும் முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி முருகனை மனதார வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

பங்குனி உத்திரவிழாவையொட்டி ஒவ்வொரு வருடமும், திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு பங்குனி உத்திரவிழா காரணமாக கொடுமுடி தீர்த்தக்காவடிகளுடன் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை வருகின்றனர். இன்று அணைத்து முருகன் கோவில்களிலும் ஏராளமான பகதர்கள் சென்று வழிபடுவதால் இன்று கூட்டம் சற்று அதிகமாக இருக்கும் என்பதால் தீவிர பாதுகாப்புகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.