குலம் காக்கும் குலதெய்வம்... என்றும் முதலிடம் குலதெய்வத்திற்கே... ஏன்?
kula deivam is first god
நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும், கருத்துமாக பேணிக்காக்கும் வல்லமை படைத்தவை.
எனவேதான் அந்த தெய்வங்களை 'குலதெய்வங்கள்" என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
குலதெய்வத்தின் சிறப்புகள் :
குலதெய்வங்கள் பொதுவாக காடு, மலை மற்றும் வயல் போன்ற இடங்களில்தான் அமைந்திருக்கும். பெரும்பாலும் கிராமங்களை ஒட்டியே இவ்வகை தெய்வங்களின் வழிபாட்டு இடம் இருக்கும்.
மேலும் குலதெய்வ கோவில்கள் பெரிய அளவில் கோபுரங்களை கொண்டிருப்பதில்லை. சிறிய கோவில் அமைப்பாகத்தான் இருக்கும். இவ்வகை கோவில்கள் முறைப்படி அமைக்கப்பட்டிருக்காது. அந்தந்த இடத்திற்கு ஏற்றாற்போல் இருக்கும்.
இவை பெரும்பாலும் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியே அமைந்திருக்கும். பெரும்பாலும் வேம்பு அல்லது வில்வ வகை மரங்கள் குலதெய்வ கோவில்களில் இடம் பெற்றிருக்கும்.
ஆன்மிக ரீதியில் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் குலதெய்வம், இஷ்டதெய்வம் என்று தெய்வங்கள் இருக்கலாம்.
பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக இருப்பது, அவரது குலதெய்வம் மட்டுமே.
குலதெய்வங்கள் ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றிவிடும் சக்தி பெற்றவை. குலதெய்வங்கள் தெரியாதவர்கள், எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டு கொள்ளலாம்.
ஆனால் அதன் மூலம் பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்குதான் நிவர்த்தி செய்ய முடியும். அதுவே குலதெய்வ வழிபாடு என்றால், நம்முடைய கர்மாக்கள் முற்றிலும் நிவர்த்தியாகிவிடும் என்பதுதான் அதன் சிறப்பு அம்சமாகும்.
குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது.
குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால், ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலனை பெற முடியாது.
குலதெய்வ வழிபாட்டை மாதம் ஒருமுறை மேற்கொண்டால் நமது எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
தேகநலம் சீராக வேண்டுமானாலும், செல்வ வளம் பெருக வேண்டுமானாலும் குலதெய்வ வழிபாடுகள் கை கொடுக்கும்.
எனவே மறவாமல் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு சகல யோகங்களும் வந்து சேர வழியமைத்து கொள்ளுங்கள்.