சிலை மாயம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...! ‘பல்லி’ பத்திரமாக இருப்பது உறுதி! - இணை ஆணையர் குமரதுரை விளக்கம்
controversy over disappearance idol over Palli safe confirmed Joint Commissioner Kumaradurai explains
வரதராஜப் பெருமாள் கோவிலில் தங்கப்பல்லி சிலை மாயம் என்ற பரபரப்பு குற்றச்சாட்டைத் தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணை குறித்து, காஞ்சீபுரம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை வெளியிட்ட செய்திக்குறிப்பு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்ததாவது,"காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் இரண்டு பல்லி சிலைகள் உள்ளன,ஒன்று வெள்ளியால் ஆன சிறிய சிலை, மற்றொன்று ‘தங்கப்பல்லி’ என்று அழைக்கப்படும் பித்தளையால் ஆன பெரிய சிலை.

இந்த இரண்டு சிலைகளும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறப்பாக வழிபடும் முக்கிய தெய்வச் சின்னங்களாகும்.பல்லி சிலைகள் உயரமாக அமைந்திருப்பதால் முதிய பக்தர்கள் தொட்டு வணங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி புனரமைப்பு பணிகள் ரூ.76.90 லட்சம் மதிப்பில் எல் & டி நிறுவனத்தின் மூலம் தொடங்க திட்டமிடப்பட்டது.
ஆனால், சிலர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் கோவிலுக்கே சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டு, பணிகள் முன்னேற அனுமதி வழங்கப்பட்டது.இதற்கிடையில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்ற நபர் “தங்கப்பல்லி சிலை மாயம்” மற்றும் “பித்தளை, வெள்ளி சிலைகள் மாற்றம் செய்யப்படுகின்றன” என கூறி புகார் அளித்தார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 5ஆம் தேதி கோவிலின் உதவி ஆணையர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ராஜலட்சுமியிடம் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில், “அனைத்து புனரமைப்பு பணிகளும் துறை அனுமதி பெற்றே நடைபெறுகின்றன” என அவர் தெளிவுபடுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இணை ஆணையர் குமரதுரை நேரில் ஆய்வு மேற்கொண்டபோது, கோவிலின் நகைகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறையில் பல்லி சிலைகள் இரண்டும் பத்திரமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது.இதனால், ரங்கராஜ நரசிம்மன் அளித்த புகார் ஆதாரமற்றதும் தவறானதும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பொய் தகவல் பரப்பியதற்காக அவர்மீது சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார் இணை ஆணையர் குமரதுரை.
English Summary
controversy over disappearance idol over Palli safe confirmed Joint Commissioner Kumaradurai explains