பிரம்மோற்சவ காலங்களில் மட்டுமே பூக்கும் மரம்.!! - Seithipunal
Seithipunal


அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில் :

அமைவிடம் :

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில் சுந்தரர் பாடல் பெற்ற சிவதலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவதலம் தற்போது அவிநாசி என்று அழைக்கப்படுகிறது. 

மாவட்டம் :

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி, திருப்பூர் மாவட்டம்.

எப்படி செல்வது?

கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் வழியில் அவிநாசி என்னுமிடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம்.

கோயில் சிறப்பு :

இத்தலத்தின் தலவிருட்சமான பாதிரிமரம், இத்தலத்தின் பிரம்மோற்சவ காலங்களில் மட்டுமே பூக்கிறது. மற்ற காலங்களில பூக்காது இருப்பது அதிசயமாகும். மரத்தின் இத்தகைய இயல்பானது, இறைவனின் மீது தலவிருட்சம் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது என தலபுராணம் கூறுகிறது. 

காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இங்குள்ள அவிநாசியப்பர், பைரவர், காசி தீர்த்தம் மூன்றும் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டவை. அமாவாசையன்று இங்குள்ள காசிக்கிணற்றில் நீராடி இறைவனை வழிபடுவது சிறப்பு. 

இத்தலத்தில் 32 கணபதிகள் அருள்பாலிக்கின்றனர். சிவனுக்கு எதிரில் உள்ள ராஜகோபுரத்தின் தென்திசையில் தட்சிணாமூர்த்தி நடனமாடும் கோலத்தில் உள்ளார். சிவசூரியன் தனி சன்னதியில் அருளுகிறார். நர்த்தன கணபதிக்கு முன்னால் மூஞ்சூறு வாகனத்திற்கு பதில் சிம்ம வாகனம் உள்ளது.

அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பலாம்.

கோயில் திருவிழா :

சித்திரையில் பிரமோற்சவம், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் கொடியேற்றம், பூரத்தில் தேர்த்திருவிழா. இத்திருவிழாவில் 5ம் நாள் மிகவும் முக்கியமானதாகும். அன்றைய தினம் 63 நாயன்மார்களுக்கும் இறைவன் ரிஷபாரூடராக தரிசனம் தருவது சிறப்பு.

வேண்டுதல் :

இங்குள்ள இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மை கிடைக்கும். அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சனிபகவானை வழிபாடு செய்தால் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன் :

இத்தலத்தில் உள்ள பைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபடுவது விசேஷம். எதிரி பயம், வழக்கு விவகாரம் நீங்க பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதிகளில் இவருக்கு வடைமாலை சாற்றி வழிபடுகிறார்கள். குடும்ப ஒற்றுமை ஏற்பட, ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காயில் குங்குமம் தடவி விளக்கேற்றி, செவ்வரளியில் அர்ச்சனை செய்து நேர்த்திகடன் செலுத்துகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

avinashiappar temple


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->