இன்று புதன்கிழமை... ஆவணி பிரதோஷம்... மறவாமல் சிவதரிசனம் செய்யுங்கள்.!
avani piratharisanam
ஆவணி மாத பிரதோஷம்:
பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது.
அதனால்தான் பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையான மாலை வேளையில், சிவபெருமானுக்கும், நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெறும்.
அப்போது 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சமர்ப்பிப்பது விசேஷம். அதேபோல் சிவபெருமானுக்கு வில்வ இலையால் அலங்கரிப்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது.
புதன்கிழமையைச் சொல்லும்போது, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அவ்வாறு சிறப்பு பெற்ற புதன்கிழமையான இன்று ஆவணி மாத பிரதோஷம்.
எனவே, இன்று மாலை அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். முடிந்தால் அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். செவ்வரளி மாலையும், வில்வமும், அருகம்புல்லும் கொண்டு நந்திதேவருக்கும், சிவபெருமானுக்கும் சார்த்தி வணங்குங்கள்.
நந்திதேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.
பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபடுவதால் சுப மங்களம், நல்லெண்ணம், நல்லருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். நல்ல புத்திரபாக்கியம் கிடைக்கும். திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும். எதிரிகள், எதிர்ப்புகள், அனைத்து துன்பங்களும் விலகும்.
ஆவணி மாதத்தின் பிரதோஷம் அற்புதமான புதன்கிழமையில் வருகிறது. இன்று மறவாமல் சிவதரிசனம் செய்து ஞானமும், யோகமும் பெறுவோம்.