அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லா ஆன்மீக பயணம் - எப்படி விண்ணப்பிப்பது?
application open for free murugan temples spiritual journy
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய மூத்த குடிமக்கள் அதற்காக விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
"இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மானியம் வழங்கப்பட்டு வருவதுடன், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோவில்களுக்கும், ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கும், அறுபடை வீடுகளுக்கும் பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 2025 - 2026ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் விதமாக "தமிழ் கடவுள்" என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 2,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படவுள்ளனர்.
ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும்.
இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 15.09.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அறுபடைவீடு ஆன்மிகப் பயணம் தொடர்பான விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஆகவே, இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
application open for free murugan temples spiritual journy