இன்றுடன் நிறைவடைந்த அக்னி நட்சத்திரம்: அண்ணாமலையாருக்கு 1008 கலசாபிஷேகம்..!
1008 Kalasabhishegam for Annamalaiyar on the occasion of Agni Nakshatra which ended today
கடந்த 04-ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. கடந்த எந்தாண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு மார்ச் மாதத்தில் 106 டிகிரிக்கு மேல் வெயில் தமிழகத்தில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் கத்தரி வெயில் காலத்தில் காற்று சுழற்சி மற்றும் முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யத்தொடங்கியுள்ளது. இதனால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

இந்நிலையில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி நட்சத்திர பரிகார நிவர்த்தியாக திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 04-ஆம் தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற்று வந்தது.
அதன்படி, தினமும் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை, சுவாமி சன்னதி கருவறையில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர், இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் சிந்தியடி குளிர்விக்கப்பட்டது.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதனால், அண்ணாமலையார் கோயிலில் அக்னி தோஷ நிவர்த்தி பரிகார பூஜைக்காக 1008 கலச அபிஷேகம் இன்று காலை நடைபெற்றுள்ளது.
இன்று அண்ணாமலையாருக்கு நடைபெற்ற 1008 கலசாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மேலும், அக்னி நட்சத்திர நிறைவாக இன்றிரவு 08 மணிக்கு அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் மாடவிதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
English Summary
1008 Kalasabhishegam for Annamalaiyar on the occasion of Agni Nakshatra which ended today