'ஃபோனைத் திறந்தாலே முகம் சுளிக்கும் ரீல்ஸா'...? - ஒரே கிளிக்கில் தூக்கியெறியும் அசத்தல் ட்ரிக்...!
Reel that makes you frown when you open your phone strange trick that can be thrown away with just one click
இன்ஸ்டாகிராமை திறந்தவுடன் மீண்டும் மீண்டும் ஒரே வகையான ரீல்ஸ் காணொலிகள் தோன்றுகிறதா? ஒருமுறை நீங்கள் பார்த்த அல்லது விரும்பிய ஒரு குறிப்பிட்ட வகை காணொலியை அடிப்படையாகக் கொண்டு, அதேபோன்ற பதிவுகளை தொடர்ந்து பரிந்துரைப்பது இன்ஸ்டாகிராமின் பரிந்துரை அமைப்பின் இயல்பாகும். ஆனால், பழைய விருப்பங்களால் உருவாகும் இந்தப் பரிந்துரைகளை மாற்றி, புதிய வகையான காணொலிகளைப் பெறுவதற்கும் வழி உள்ளது.

இன்றைய இணைய உலகில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களை கண்டுபிடிப்பதே அரிதாகிவிட்டது. குறிப்பாக இன்ஸ்டாகிராம், இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரிடமும் முக்கியமான பொழுதுபோக்கு தளமாக மாறியுள்ளது.குறுகிய நேரத்தில் சுவாரஸ்யமான தகவல்கள், நகைச்சுவை, பொழுதுபோக்கு, சமையல், பயனுள்ள குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்குவதால் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் காணொலிகளுக்கு தனி வரவேற்பு உள்ளது.
இதனால், தினமும் ரீல்ஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகை ரீல்ஸை தொடர்ந்து பார்ப்பது, அதற்கு விருப்பம் தெரிவிப்பது அல்லது அதில் அதிக நேரம் செலவிடுவது போன்ற செயல்களை இன்ஸ்டாகிராம் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது.
அதன் அடிப்படையில், உங்களுக்கு அந்த வகை காணொலிகள் பிடிக்கும் என்று கணித்து, அதே பாணியில் மேலும் பல பதிவுகளை பரிந்துரைக்கத் தொடங்குகிறது.இதனால், நாளடைவில் ரீல்ஸ் பகுதி முழுவதும் ஒரே மாதிரியான காணொலிகளால் நிரம்பிவிடும்.
சில நேரங்களில் உங்களுக்கு பிடிக்காதவை, தொடர்பில்லாதவை அல்லது பொதுவிடங்களில் பார்க்க சங்கடமாக இருக்கும் காணொலிகள்கூட தொடர்ந்து தோன்றக்கூடும்.இத்தகைய சிக்கலை சமாளிக்க இன்ஸ்டாகிராமில் “பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தை மீட்டமைத்தல்” என்ற வசதி உள்ளது. இதன் மூலம் இதுவரை உருவாகியிருந்த பரிந்துரை முறையை மீண்டும் தொடங்கும் வகையில் மாற்றி அமைக்க முடியும்.
எப்படி மாற்றுவது?
முதலில் இன்ஸ்டாகிராம் செயலியைத் திறக்கவும்.உங்கள் சுயவிவரப் பகுதிக்குச் செல்லவும்.மேல் வலது மூலையில் இருக்கும் மூன்று கோடுகள் குறியீட்டைத் தட்டவும்.அங்கு காணப்படும் உள்ளடக்க விருப்பங்கள் பகுதியைத் தேர்வு செய்யவும்.பின்னர் பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தை மீட்டமைத்தல் என்ற வசதியைத் தேர்ந்தெடுக்கவும்.தொடர்ந்து வரும் உறுதிப்படுத்தல் அறிவிப்பை ஏற்றுக்கொண்டு மீட்டமைப்பை நிறைவு செய்யவும்.
அதன் பிறகு என்ன நடக்கும்?
மீட்டமைப்பு செய்தவுடன் பழைய விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட பரிந்துரைகள் படிப்படியாக மாறத் தொடங்கும். அதன் பிறகு நீங்கள் பார்க்கும் காணொலிகள், விரும்பும் பதிவுகள் மற்றும் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இன்ஸ்டாகிராம் உங்கள் புதிய விருப்பங்களைப் புரிந்துகொள்ளும்.
அதன்படி, காலப்போக்கில் உங்களுக்கு ஏற்ற புதிய வகையான ரீல்ஸ் காணொலிகளை மீண்டும் பரிந்துரைக்கத் தொடங்கும்.ஒருமுறை பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தை மீட்டமைத்த பிறகு, அதற்கு முன்பு இருந்த பரிந்துரை நிலையை அப்படியே மீண்டும் கொண்டு வர முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.எனவே, ரீல்ஸ் பகுதியில் தொடர்ந்து ஒரே மாதிரியான காணொலிகள் வந்து சலிப்பை ஏற்படுத்தினால், பரிந்துரைகளை மீட்டமைத்து, உங்கள் புதிய விருப்பங்களுக்கு ஏற்ப காணொலி உலகை மீண்டும் உருவாக்கிக் கொள்ளலாம்.
English Summary
Reel that makes you frown when you open your phone strange trick that can be thrown away with just one click