'இசட் பிளஸ்' நீக்கம்... 'இசட்' வழங்கல்...! - ராகவ் சதா விவகாரம் அரசியல் களத்தில் கிளம்பிய புதிய சர்ச்சை...!
Z Plus removed Z issued Raghav Sadha issue new controversy political arena
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா மற்றும் கட்சி தலைமையிடையே அண்மைக் காலமாக கருத்து மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த உயர்மட்ட ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை பஞ்சாப் அரசு திடீரென திரும்பப் பெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராகவ் சதாவிற்கு முன்பு மாநில காவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த இந்த பாதுகாப்பு, சமீபத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மறுஆய்வு கூட்டத்திற்குப் பிறகு விலக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் நடவடிக்கை அரசியல் பின்னணியோடு தொடர்புடையதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், மாநில அரசு பாதுகாப்பை நீக்கிய சில மணிநேரங்களுக்குள்ளேயே, உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை அவசரமாக வழங்கியுள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் இந்த பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முழுமையான பாதுகாப்பு அமைப்பு அமலுக்கு வரும் வரை இடைக்கால பாதுகாப்பை உடனடியாக வழங்குமாறு டெல்லி காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பா.ஜ.க.க்கு எதிராக ராகவ் சதா தீவிரமாக கருத்து தெரிவிக்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது மத்திய அரசே அவருக்கு பாதுகாப்பு வழங்கியிருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு சந்தேகங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
மேலும், இம்மாத தொடக்கத்தில் அவர் வகித்து வந்த மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்தும் ஆம் ஆத்மி கட்சி தலைமையால் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Z Plus removed Z issued Raghav Sadha issue new controversy political arena