மகளிர் உரிமைத் தொகை பயன் தரவில்லை! பெண்களின் ஓட்டை கோட்டை விட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல்!
Womens Rights Grant scheme yields no results DMK loses womens votes Shocking findings from the analysis team
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வுக்குழு தனது விரிவான அறிக்கையை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் சில அம்சங்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய மு.க.ஸ்டாலின் 36 பேர் கொண்ட 19 கள ஆய்வுக்குழுக்களை அமைத்திருந்தார். இந்தக் குழுக்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள், அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை நேரடியாக சேகரித்தன. அவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை தற்போது திமுக தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அறிக்கையில், பெண்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு உருவான செல்வாக்கை திமுக தலைமை மற்றும் நிர்வாகிகள் சரியாக மதிப்பிடத் தவறியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, முதல் முறையாக வாக்களித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் விஜயின் பொதுக்கூட்டங்களுக்கு கிடைத்த வரவேற்பு, சமூக வலைதளங்களில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் மாற்று அரசியல் குறித்த மனநிலையை திமுக தரப்பு போதுமான அளவில் கணிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேபோல், திமுக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான மகளிர் உரிமைத் தொகை திட்டம் எதிர்பார்த்த அரசியல் பலனை அளிக்கவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகுதியுடைய பல பெண்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காததால் அதிருப்தி உருவானதாகவும், அந்த அதிருப்தியை எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகவும் ஆய்வுக்குழு கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அமைச்சர்களை பொதுமக்கள் எளிதில் சந்திக்க முடியாத சூழல் கட்சிக்கு பாதகமாக அமைந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாக தெரிவிக்க முயன்றபோதும், உதவியாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் காரணமாக பலரால் அமைச்சர்களை அணுக முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்ததாக கூறப்படுகிறது.
உள்ளாட்சித் துறைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாததும், அதிகாரிகளின் ஒத்துழைப்பு குறைந்திருந்ததும் கட்சியின் செல்வாக்கை பாதித்ததாக ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பரிந்துரைத்த திட்டங்கள் பல இடங்களில் செயல்படுத்தப்படாததால் அடிப்படை வசதிகள் தொடர்பான அதிருப்தி அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.
கட்சிக்குள் மூத்த நிர்வாகிகள் மற்றும் நீண்டகால தொண்டர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படாததும் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் பணிகளில் அனுபவம் வாய்ந்த பலர் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற குறையும் எழுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கூட்டுறவுச் சங்கங்கள், ஆவின் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாதது, அறநிலையத் துறையின் சில நியமனங்கள் தொடர்பான அதிருப்தி போன்ற காரணிகளும் அடிமட்டத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசும் கட்சியும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய இடத்தில் தனித்தனியாக இயங்குவது போன்ற தோற்றம் மக்களிடையே உருவானதால், அரசின் சாதனைகள் வாக்குகளாக மாறவில்லை என்றும், நிலையான ஆதரவு வாக்காளர்களை உருவாக்க முடியாமல் போனதாகவும் ஆய்வுக்குழு கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கை தொடர்பாக திமுக தலைமை இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் வெளியிடவில்லை. இருப்பினும், கள ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் அமைப்பு, தேர்தல் வியூகம் மற்றும் அடிமட்ட செயல்பாடுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
English Summary
Womens Rights Grant scheme yields no results DMK loses womens votes Shocking findings from the analysis team