அரசியல்வாதிகள் கட்சி மாறினால் ஏன் ‘குதிரை பேரம்’ என்கிறார்கள்? ‘Horse Trading’ பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசியலில் தற்போது கட்சித் தாவல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து செல்வதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போதெல்லாம் ‘ஹார்ஸ் டிரேடிங்’ அல்லது ‘குதிரை பேரம்’ என்ற வார்த்தையை அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ஆனால் அரசியல்வாதிகள் கட்சி மாறுவதற்கும் குதிரைகளை விற்பனை செய்வதற்கும் என்ன தொடர்பு? அரசியலில் இந்த வார்த்தை எப்படி வந்தது? அதன் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறே உள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் ‘குதிரை பேரம்’ என்ற வார்த்தை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து, அதிமுகவை சேர்ந்த முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சிட்டிங் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து கட்சி மாறி வருவதாக கூறப்படுகிறது.

விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து தவெக பக்கம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தங்களது கட்சி எம்எல்ஏக்களை ஆசை காட்டி குதிரை பேரம் பேசி தவெக இழுப்பதாக அதிமுக குற்றம்சாட்டி வருவதாக கூறப்படுகிறது.

மறுபுறம், தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திமுக தரப்பில் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்படுவதாக ஆளுங்கட்சி தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு கட்சிகள் ஒன்றுக்கொன்று புகார்களை முன்வைத்து வரும் நிலையில், ‘குதிரை பேரம்’ என்ற வார்த்தையும் தமிழக அரசியலில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

‘Horse Trading’ என்ற ஆங்கில வார்த்தையின் நேரடிப் பொருள் ‘குதிரை வியாபாரம்’ என்பதாகும்.19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் கிராமப்புற பகுதிகளில் குதிரைச் சந்தைகள் மிகவும் பிரபலமாக இருந்தன.

அந்தக் காலத்தில் இன்றுபோல் கார்கள், லாரிகள் மற்றும் டிராக்டர்கள் போன்ற நவீன வாகனங்கள் இல்லை. போக்குவரத்து, விவசாயம் மற்றும் சரக்குகளை எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு குதிரைகள் முக்கியமாக பயன்படுத்தப்பட்டன.

இதனால் குதிரைகளுக்கான தேவை அதிகமாக இருந்ததுடன், குதிரை வியாபாரமும் மிகப்பெரிய தொழிலாக இருந்தது.ஒரு குதிரையை வாங்கும்போது அதன் உண்மையான வயது, உடல்நிலை மற்றும் ஓடும் திறன் ஆகியவற்றை எளிதாக கண்டுபிடிக்க முடியாது.

மாடுகளை வாங்கும்போது அதன் உடல் அமைப்பு, பால் கறக்கும் திறன் உள்ளிட்ட சில விஷயங்களை பார்த்து முடிவு செய்ய முடியும். ஆனால் குதிரைகளின் விஷயத்தில் நிலைமை வேறாக இருந்தது.குதிரையின் பற்கள் மற்றும் ஓடும் திறனை வைத்து அதன் வயது மற்றும் உடல்நிலையை கணிக்க வியாபாரிகள் முயற்சி செய்வார்கள்.

ஆனால் விற்பனையாளர்கள், தங்களிடம் இருக்கும் வயதான அல்லது நோய்வாய்ப்பட்ட குதிரைகளின் குறைபாடுகளை மறைத்து அவற்றை நல்ல குதிரைகள் போல காட்டி விற்பனை செய்ய முயற்சிப்பார்கள்.

குதிரைச் சந்தைகளில் விற்பனையாளரும் வாங்குபவரும் கடுமையான பேரங்களில் ஈடுபடுவார்கள்.விற்பனையாளர் தனது குதிரையின் குறைகளை மறைத்து அதிக விலைக்கு விற்க முயற்சிப்பார். மறுபுறம், வாங்குபவர் குதிரையின் குறைகளை கண்டுபிடித்து முடிந்தவரை குறைந்த விலைக்கு வாங்க முயற்சிப்பார்.இதனால் ஒரு குதிரையை வாங்குவதற்கே ஒரு நாள் முழுவதும் பேரம் நடைபெறும் சம்பவங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

சில நேரங்களில் இந்த வாக்குவாதங்கள் சண்டை வரை சென்றதாகவும் சொல்லப்படுகிறது. உண்மையை வெளிப்படையாக பேசுவதை விட, எதிர் தரப்பை ஏமாற்றுவதற்கான தந்திரங்களே இந்த வியாபாரத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ‘Horse Trading’ என்பது சாதாரண குதிரை வியாபாரத்தை மட்டும் குறிக்காமல், கடுமையான பேரம், ரகசிய ஒப்பந்தம் மற்றும் நேர்மையற்ற கொடுக்கல்-வாங்கலை குறிக்கும் வார்த்தையாக மாறியது.

1890களில் இந்த வார்த்தை அமெரிக்க அரசியல் களத்திலும் பயன்படுத்தப்பட தொடங்கியதாக கூறப்படுகிறது.நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் ஒரு முக்கிய மசோதாவை நிறைவேற்ற ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் சூழல் ஏற்படும்.அப்போது திரைக்குப் பின்னால் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

“நீங்கள் எங்களது மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தால், உங்களுக்கு இந்த சலுகையை வழங்குகிறோம்” என்பது போன்ற பேரங்கள் அரசியல் கட்சிகளுக்கு இடையே நடந்ததாக கூறப்படுகிறது.

அந்தக் காலத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டம் போன்ற கட்டுப்பாடுகள் இல்லாததால், உறுப்பினர்கள் தங்களது கட்சி நிலைப்பாட்டை மீறி தேவைக்கேற்ப வாக்களிப்பதும் வழக்கமாக இருந்தது.

குதிரைச் சந்தையில் நடைபெறும் ரகசிய பேரங்களை போலவே, அரசியலிலும் பதவி மற்றும் சலுகைகளுக்காக நடைபெறும் கொடுக்கல்-வாங்கலை ‘Horse Trading’ என்று அழைக்க தொடங்கினர்.இந்திய அரசியலில் ஆரம்ப காலத்தில் ‘Horse Trading’ என்ற வார்த்தை பெரிய அளவில் பிரபலமாக இருக்கவில்லை.

1967ஆம் ஆண்டு ஹரியானாவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கயா லால் என்பவர் ஒரே நாளில் மூன்று முறை கட்சி மாறிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து இந்திய அரசியலில் ‘ஆயா ராம், கயா ராம்’ என்ற சொற்றொடர் பிரபலமானது.

அதாவது, ஒரு அரசியல்வாதி ஒரு கட்சிக்கு வருவதும், சிறிது நேரத்தில் மற்றொரு கட்சிக்கு செல்வதும், மீண்டும் பழைய கட்சிக்கே திரும்புவதையும் குறிக்கும் வகையில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

பின்னர் இந்திய அரசியலில் ஆட்சியை அமைப்பதற்காக அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எம்எல்ஏக்களை ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு இழுக்கும் சம்பவங்கள் அதிகரித்தன.

எம்எல்ஏக்களுக்கு பணம், அமைச்சர் பதவி அல்லது முக்கிய அரசியல் பொறுப்புகளை வழங்குவதாக கூறி கட்சி மாற வைக்கும் சம்பவங்கள் தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளை குறிப்பிடுவதற்கு சர்வதேச அளவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த ‘Horse Trading’ என்ற வார்த்தை இந்திய அரசியலிலும் அதிகளவில் பயன்படுத்தப்பட தொடங்கியது.

குறிப்பாக, சமீப ஆண்டுகளில் பல மாநிலங்களில் ஆட்சி மாற்றங்களின்போது எம்எல்ஏக்கள் கட்சி மாறிய சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து ‘குதிரை பேரம்’ என்ற வார்த்தை இந்திய ஊடகங்களில் பொதுவான அரசியல் சொல்லாக மாறியுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், பழைய குதிரைச் சந்தைகளில் ஒரு குதிரையின் உண்மையான தரம் மற்றும் குறைபாடுகளை மறைத்து, கடுமையான ரகசிய பேரங்களின் மூலம் வியாபாரம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் அரசியலிலும் மக்களின் வாக்குகளை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தங்களது கொள்கை மற்றும் கட்சி விசுவாசத்தை ஒதுக்கிவிட்டு பணம், பதவி அல்லது அதிகாரத்திற்காக வேறு கட்சிக்கு மாறுவதாக குற்றச்சாட்டு எழும்போது, அதனை ‘Horse Trading’ அல்லது ‘குதிரை பேரம்’ என்று அழைக்கிறார்கள்.

அதாவது, எல்லா கட்சித் தாவல்களையும் குதிரை பேரம் என்று கூற முடியாது. ஆனால் பணம், பதவி, அதிகாரம் அல்லது ரகசிய சலுகைகளுக்காக மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறுவதாக குற்றச்சாட்டு எழும்போதுதான் இந்த வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

19ஆம் நூற்றாண்டின் குதிரைச் சந்தைகளில் தொடங்கியதாக கூறப்படும் இந்த வார்த்தை, இன்று இந்திய அரசியலில் ஆட்சி அமைத்தல், பெரும்பான்மை நிரூபித்தல் மற்றும் எம்எல்ஏக்களின் கட்சித் தாவல் தொடர்பான விவாதங்களில் தவிர்க்க முடியாத அரசியல் சொல்லாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why is it called horse trading when politicians switch parties The fascinating history behind the term


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->