"நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ்" முதல்வர் விஜய் "ரீல்ஸ் அரசியலை நிறுத்துங்கள்" - டிடிவி தினகரன் சாடல்!
Why Did CM Vijay Ignore Protesting Staff at TNEB HQ TTV Dhinakaran Slams TVK Govt Over Power Outages and Reels Politics
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பரவலான மின்வெட்டு நிலவி வரும் நிலையில், நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காகச் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத் தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (செப்டம்பர் 23, 2026) காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் இந்த ஆய்வினை "ரீல்ஸ் அரசியல்" எனக் கடுமையாகச் சாடியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பல்வேறு காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்துத் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் ஆய்வு என்ற பெயரில் நின்றுகொண்டு கேமராக்களுக்கும் மக்களுக்கும் கை அசைத்துச் சென்ற முதலமைச்சர் விஜய், அதே அலுவலகத்தின் அருகே காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும், டி.என்.பி.எஸ்.சி (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கக் கோரியும் போராடிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களை நேரில் சந்திக்காமல் சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் போன்ற மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், "நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ்" என விளம்பர அரசியலுக்காக மட்டுமே தவெக அரசு சம்பிரதாயமான ஆட்சியை நடத்தி வருவதாக அரசு ஊழியர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மின்வெட்டு தொடர்பாகக் காற்று நின்றுவிட்டது, தண்ணீர் வற்றிவிட்டது, சோலார் மின்சாரத்தைச் சேமிக்க இடமில்லை எனத் துறை அமைச்சர்கள் ஆளுக்கொரு முரணான காரணங்களைக் கூறி வந்த நிலையில், தற்போது ஊழியர்கள் பற்றாக்குறையும் பராமரிப்பின்மையுமே மின்வெட்டுக்குக் காரணம் எனப் புதிய கதையை எரிசக்தித் துறை அமைச்சர் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகத் தினகரன் விமர்சித்தார். தனது துறை சார்ந்த பொறுப்புகளை விடுத்து மற்ற விஷயங்களில் தலையிடுவதை வாடிக்கையாக வைத்துள்ள மின்சாரத் துறை அமைச்சர், தமிழகமே இருளில் மூழ்கிய பிறகே விழித்துக் கொண்டு காரணம் கூறுகிறார் என்றும் சாடினார்.
எனவே, தங்களது நிர்வாகத் திறமையின்மையை மறைக்கப் புதிய கதைகளைக் கூறுவதையும், எதிர்க்கட்சிகள் மீது பழிபோட்டு மக்களைத் திசைதிருப்புவதையும் உடனடியாக நிறுத்திவிட்டு, மின்வெட்டுக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து தடையற்ற மின்சாரம் வழங்கத் தவெக அரசும் மின்சார வாரியமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது அறிக்கையில் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Why Did CM Vijay Ignore Protesting Staff at TNEB HQ TTV Dhinakaran Slams TVK Govt Over Power Outages and Reels Politics