ஆட்களை இழுக்கும் வேகம் அணை விவகாரத்தில் எங்கே...? - தவெக அரசை வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்...! - Seithipunal
Seithipunal


மேகதாது அணை விவகாரம் மீண்டும் தீவிர அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழக அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்படுவதாவது,"எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதில் காட்டப்படும் அரசியல் வேகத்தையும், அதே தீவிரத்தையும் மேகதாது அணைத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதிலும் தமிழக வெற்றிக் கழக அரசு வெளிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை நேரில் சந்தித்து, கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்த வேண்டும்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், “மேகதாது அணைத் திட்டம் எனக்கு மிகவும் முக்கியமானது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.மேலும், “மேகதாது என்பது சமநிலை அணைத் திட்டம்.

அங்கு நீரை சேமித்தால் வறட்சி காலங்களில் தமிழ்நாட்டிற்கு சீராக தண்ணீர் திறந்துவிட முடியும்” என கூறி, தமிழ்நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக தெரிகிறது.காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவிடம் இருந்து முதலமைச்சர் பதவியை கைப்பற்றிய டி.கே. சிவகுமார், அந்த பதவியை உறுதியாக தக்க வைத்துக்கொள்ள மேகதாது பிரச்சினையை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார் என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழ்நாடு–கர்நாடக உறவில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் பெறும் நோக்கம் இதில் இருக்கலாம் என்பதும் மறுக்க முடியாத ஒன்று.துணை முதலமைச்சராகவும், நீர்ப்பாசனத் துறை அமைச்சராகவும் இருந்த காலத்திலிருந்தே “மேகதாது அணை கட்டியே தீருவோம்” என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

தற்போது முதலமைச்சராகிய பிறகு, இந்த திட்டத்தை முன்னிறுத்தி கர்நாடக அரசியலில் தனது செல்வாக்கை வலுப்படுத்த முயற்சித்து வருகிறார்.காவிரி ஆற்றின் குறுக்கே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் அணை கட்ட முடியாது என்பது உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பாகும்.அந்த தீர்ப்பை மதித்து செயல்படுவது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவியேற்ற கர்நாடக முதலமைச்சரின் அடிப்படை கடமையாகும்.

ஆனால், நீதிமன்ற தீர்ப்பை பொருட்படுத்தாமல் மேகதாது அணை கட்டும் முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருவது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது.உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் முறையாக திறந்துவிடாத நிலை தொடர்கிறது.மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரே தற்போது தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில் மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தற்போது கிடைக்கும் அந்த உபரி நீரும் தமிழ்நாட்டை அடையாமல் போகும் அபாயம் உருவாகும்.இதனால், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, குடிநீர் நெருக்கடியும் மோசமடையும். காவிரி நீரை சார்ந்திருக்கும் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.எனவே, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு உறுதியுடன் தடுத்து நிறுத்த வேண்டும்.

கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியில் உள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளனர்.இந்த அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழ்நாட்டை சமரசப்படுத்தலாம் என்று கர்நாடக அரசு கருதக்கூடும்.

ஆனால், கூட்டணி அரசியலை காரணமாக காட்டி மேகதாது விவகாரத்தில் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானதாக முடியும்.எனவே, கூட்டணி கட்சித் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்து, மேகதாது அணைத் திட்டத்தை கைவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்த வேண்டும்.

வெறுமனே கடிதம் அனுப்புவது, கோரிக்கை விடுப்பது, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகள் மட்டும் போதுமானதல்ல.உறுதியான அரசியல் அழுத்தமும் நேரடி பேச்சுவார்த்தையும் மூலமாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.தமிழகத்தின் நீர்வள உரிமையை பாதுகாக்கும் விவகாரத்தில் அரசு உறுதியான, சமரசமற்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.இல்லையெனில், தமிழ்நாட்டு மக்கள் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Where momentum attract people dam issue Vanathi Srinivasan who bought tvk government


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->