மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே...? - தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து ஆளும் அரசுக்கு வேல்முருகன் அதிரடி கேள்வி...!
Where guarantee lives people Velmurugan sharp question ruling government regarding law and order Tamil Nadu
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடுமையான கவலை வெளியிட்டுள்ளார்.அவர் தனது பதிவில் குறிப்பிட்டதாவது,"தமிழ்நாட்டில் பொதுமக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவதும், சமூக விரோத சக்திகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதும் அரசின் அடிப்படை பொறுப்பாகும்.
ஆனால் சமீப காலங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழும் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு அமைப்பு கவலைக்கிடமான நிலையை நோக்கி நகர்ந்து வருவதை வெளிப்படுத்துகின்றன.திண்டிவனம் அருகே சலூன் கடை உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், திருச்சியில் பிரபல ரவுடி ஒருவர் பொதுமக்கள் கண்முன்னே விரட்டி தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், சிவகங்கை மாவட்டத்தில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட தொடர் கொலைகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த வழக்குகளில் தொடர்புடைய சிலரை காவலர்கள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், இளையான்குடி பகுதியில் சிறுமி ஒருவருக்கு துன்புறுத்தல் அளித்ததாக இரு சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளதும் சமூக அக்கறையை எழுப்பும் நிகழ்வாகும்.சென்னையில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் இரு தரப்பினருக்கிடையேயான மோதலில் பலர் காயமடைந்த சம்பவத்திலும், சம்பந்தப்பட்டவர்களை காவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கல் தொடர்பான பல்வேறு வழக்குகளிலும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனுடன், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருவது வேதனையளிப்பதாகும்.
திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பதிவான சம்பவங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளன.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பகல் நேரத்திலேயே குற்றச் செயல்கள் அரங்கேறுவது, குற்றவாளிகளின் துணிச்சல் அதிகரித்திருப்பதை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.சட்டம்-ஒழுங்கு நிலையை மேம்படுத்தும் நோக்கில் அரசு உடனடியாக விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு சூழலை உறுதி செய்ய முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். குற்றப் பின்னணி கொண்ட நபர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
மேலும், பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். கொலை, கொள்ளை உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்கும் சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட வேண்டும்.தமிழ்நாட்டில் அமைதியும் பாதுகாப்பும் நிலவ வேண்டுமெனில், சட்டம்-ஒழுங்கு அமைப்பை வலுப்படுத்துவதற்கான உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் அவசியம்.
சமூக விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்தி, மக்களின் இயல்பான வாழ்க்கை முறையை பாதுகாப்பதே அரசின் முதன்மை கடமையாகும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Where guarantee lives people Velmurugan sharp question ruling government regarding law and order Tamil Nadu