மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது? அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன குட்நியூஸ்!
When will women entitlement amount be Rs 2500 Good news from Minister Nirmal Kumar
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 இலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதையடுத்து, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த தொகை எப்போது உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான நிர்மல் குமார், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார். தற்போது ரூ.1,000 தான் வழங்கப்படுகிறது. ரூ.2,500 எப்போது வழங்கப்படும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “நிதி சார்ந்த திட்டங்களுக்கு பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. பட்ஜெட்டுக்கு பிறகுதான் இதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். முதல்வர் விஜய் தேவையான நிதி ஆதாரங்களை ஆராய்ந்து சரிசெய்த பிறகே இந்த திட்டம் அமலுக்கு வரும். ஒரு அரசாணை வெளியிட்டவுடன் உடனே செய்யக்கூடிய விஷயம் இது அல்ல” என்று கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம் திமுக ஆட்சி காலத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் செங்கோட்டையன் புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்ஜெட்டின் போது அல்லது அதற்குப் பிறகு மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையில், “முதல்வர் விஜய் இதுவரை செய்தியாளர்களை நேரில் சந்திக்கவில்லை. இனிமேலாவது சந்திப்பாரா?” என்ற கேள்விக்கும் நிர்மல் குமார் பதிலளித்தார்.
அதற்கு அவர், “தேவையான நேரத்தில் முதல்வர் செய்தியாளர்களை சந்திப்பார். தினசரி அரசின் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக செய்திக்குறிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. செய்தியாளர்களை கட்டாயம் தினமும் சந்திக்க வேண்டும் என்ற எந்த விதிமுறையும் இல்லை” என்று தெரிவித்தார்.
English Summary
When will women entitlement amount be Rs 2500 Good news from Minister Nirmal Kumar