விஜய் பிரசாரம் எப்போது? – தவெக சுற்றுப்பயண விவரங்கள் வெளியீடு! டிடிவி தினகரன் பற்றி செங்கோட்டையன் பேசியது இதுதான்!
When is Vijay campaign Tvk tour details released This is what Sengottaiyan said about TTV Dhinakaran
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், கடந்த டிசம்பர் 18-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் எந்த அரசியல் நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வருவது, கட்சி தொண்டர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, “விஜய் தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்கும்?” என்ற எதிர்பார்ப்பு தீவிரமாக எழுந்துள்ள சூழலில், தவெக உயர்மட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசியலில் ஒருபுறம் அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் திமுகவில் புதிய இணைப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், கடந்த சில வாரங்களாக வெளிப்படையான செயல்பாடுகள் இல்லாமல் இருந்த தவெக, இன்று மீண்டும் அரசியல் வேகத்தை காட்டத் தொடங்கியுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது செங்கோட்டையன் பேசுகையில்,
“விஜய் உத்தரவுப்படி கட்சி நிர்வாகிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். பயணத் திட்டம் சென்னையில் உள்ள 13 தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த சுற்றுப்பயணம் ஜனவரி 26-ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் ஒருங்கிணைப்போடு பயணங்கள் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
“விஜய் எப்போது நேரடியாக தேர்தல் பிரசாரம் தொடங்குவார்?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன்,“பயணத் திட்டங்கள் தயாராகி வருகின்றன. அதற்கான இடங்களையும் தேர்வு செய்து வருகிறோம். காவல்துறை அனுமதியுடன் கூடிய விரைவில் பயணம் தொடங்கும். சில விதிமுறைகள் உள்ளன. அவற்றுக்கு ஏற்ப இடங்களை தேர்வு செய்து, காவல்துறை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் அனைத்தும் முடியும்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில்,
“2010-ல் மூன்று கூட்டங்களே நடத்தப்பட்டன. கோவை, திருச்சி, மதுரை – மூன்று இடங்களில் முடித்தோம். வெற்றி என்பது ஒரு இலக்கை நோக்கி செல்லும் பயணம். பணம் கொடுக்காமல் மக்கள் கூடுகிற ஒரே தலைவர் விஜய் தான். அதனால் கூட்டம் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை. கூட்டணியா, தனித்து போட்டியா என்பது குறித்து விரைவில் விஜயே அறிவிப்பார்” என்று கூறினார்.
டிடிவி தினகரன் மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணியில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,
“யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சேரலாம். அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. எங்கு சென்றாலும் வாழ்க” என செங்கோட்டையன் சுருக்கமாக பதிலளித்தார்.
இதனிடையே, தவெக தேர்தல் பிரச்சாரக் குழுவின் சுற்றுப்பயண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஜனவரி 26 முதல் தொடங்கும் இந்த 10 நாள் பயணத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் இடம்பெறுகின்றன.
சுற்றுப்பயணத் திட்டம்:
• Day 1: சென்னை (14 தொகுதிகள்), திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், ஆம்பூர்
• Day 2: கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி
• Day 3: சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர்
• Day 4: ஈரோடு, மேட்டுப்பாளையம், கோவை
• Day 5: திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி
• Day 6: திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, ராமநாதபுரம்
• Day 7: மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி
• Day 8: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை
• Day 9: அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர்
• Day 10: புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்
இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தவெக அமைப்பை பலப்படுத்தவும், அடித்தள அரசியலில் வேகம் காட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயின் நேரடி பிரசாரம் எப்போது தொடங்கும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
When is Vijay campaign Tvk tour details released This is what Sengottaiyan said about TTV Dhinakaran