2026 தேர்தலில் தேமுதிக எடுக்கும் முடிவு என்ன? –வாய்ப்புகளை வீணடிக்கும் பிரேமலதா? 2026 அவ்வளவு தானா? குழப்பத்தில் தொண்டர்கள்!
What will DMDK decide in the 2026 elections Is Premala wasting opportunities Is 2026 enough Volunteers in confusion
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவும் அதிமுகவும் தங்களின் கூட்டணி அமைப்புகளை கிட்டத்தட்ட இறுதி செய்துள்ள நிலையில், ஒருகாலத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக, எந்த அணியில் இணைவது என்ற முடிவை எடுக்க முடியாமல் திணறி வருகிறது. விஜயகாந்தின் பாரம்பரிய செல்வாக்கு, தேமுதிகவின் அடிப்படை வாக்கு வங்கி, தெலுங்கு பேசும் மக்களின் ஆதரவு போன்ற பலம் இருந்தும், அவற்றை சரியாக பயன்படுத்தத் தவறி வருகிறார்கள் என்ற விமர்சனம் தற்போது கட்சித் தலைமையின் மீது முன்வைக்கப்படுகிறது.
விஜயகாந்த் தலைமையில் தொடங்கப்பட்ட தேமுதிக, ஆரம்ப காலத்தில் மிக வேகமாக வளர்ந்த அரசியல் இயக்கமாகவே பார்க்கப்பட்டது. 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் கிடைத்த வெற்றி கட்சிக்கு உறுதியான அடித்தளமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 தொகுதிகளில் வெற்றி பெற்று, தமிழக அரசியலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்தது தேமுதிகவின் உச்சகட்டமாகக் கருதப்பட்டது.
ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற புதிய அரசியல் முயற்சியில் தேமுதிக இறங்கியதுதான் கட்சியின் அரசியல் பாதையைத் தலைகீழாக மாற்றியதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதன் பின்னர் நடந்த தொடர் தேர்தல்களில் தேமுதிக தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. ஒருகாலத்தில் 8 சதவீதத்துக்கும் மேல் இருந்த வாக்கு சதவீதம், காலப்போக்கில் சரிந்து 1 சதவீதத்துக்கும் கீழ் சென்றது.
இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் தேமுதிகவுக்கு ஒரு “அக்னி பரீட்சை” எனவே பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலிலும் கட்சி தோல்வியடைந்தால், தொண்டர்களின் மனநிலை மேலும் தளர்ந்து, கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறும் அபாயம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. அதனால் கூட்டணி முடிவில் பிரேமலதா விஜயகாந்த் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் விஜயகாந்த் மறைவால் உருவான அனுதாப அலை, தேமுதிகவுக்கு ஓரளவு சாதகமாக அமைந்தது. இருப்பினும், விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, கட்சியின் தற்போதைய அரசியல் நிலையை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்பட்டது. அதே நேரத்தில், பல தொகுதிகளில் தேமுதிக பெற்ற வாக்குகள் அதிமுகவுக்கு மறைமுகமாக பலம் சேர்த்ததும் அரசியல் கணக்கில் கவனிக்கத்தக்கதாக இருந்தது.
தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்த கூடுதல் வாக்குகள், விஜயகாந்த் மீது இருந்த தனிப்பட்ட ஈர்ப்பு, பிரேமலதா விஜயகாந்தின் தீவிர பிரச்சாரம் மற்றும் குறிப்பிட்ட சமூக ஆதரவு ஆகியவற்றின் கலவையாகவே இருந்ததாக கூறப்படுகிறது. தென்காசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் போன்ற பகுதிகளிலும் தேமுதிக வாக்குகள் கூட்டணிக் கட்சிகளுக்கு சாதகமாக மாறியதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில், இன்றும் பல தொகுதிகளில் தேமுதிகக்கு 5,000 முதல் 8,000 வாக்குகள் வரை உறுதியான ஆதரவு இருப்பதாக மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.
2026 தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இருப்பதால், திமுக மற்றும் அதிமுக வாக்குகள் பிளவுபடும் சூழல் உருவாகலாம். இந்நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசமே வெற்றியை தீர்மானிக்கும். அந்த இடைவெளியை நிரப்பும் சக்தியாக தேமுதிக வாக்குகள் அமையக்கூடும் என்பதால்தான், இரு திராவிட கட்சிகளும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கின்றன.
தற்போதைய பேச்சுவார்த்தைகளில், சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 5 அல்லது 6 என்ற அளவிலேயே பேசப்படுகிறது. ஆனால் தேமுதிக தரப்பில் கட்டாயமாக ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படுகிறது. இதன் காரணமாக, கொள்கை அடிப்படையிலான கூட்டணியை விட, பேரம் மற்றும் லாப–நஷ்ட கணக்கே முன்னிலை பெறும் சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், பிரேமலதா விஜயகாந்த் மீது சில கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. 2011, 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் கடைசி நேரம் வரை கூட்டணியை இறுதி செய்யாமல் தேமுதிக இருந்தது. விஜயகாந்த் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்த காலத்தில்கூட, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது சகோதரர் எல்.கே.சுதீஷ் இரு பெரிய கட்சிகளுடனும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியதே கூட்டணி முடிவுகள் தாமதமாகக் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அதன் விளைவாக 2021 தேர்தலில் தேமுதிக தனித்து விடப்பட்டது.
இதே தவறை தற்போது பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் செய்கிறார் என்றும், கட்சிக்கு உள்ள குறைந்தபட்ச செல்வாக்கைக் கூட சரியாக பயன்படுத்தாமல் அரசியல் வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2026 தேர்தலில் தேமுதிக எடுக்கும் முடிவே, அந்தக் கட்சியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய திருப்பமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
English Summary
What will DMDK decide in the 2026 elections Is Premala wasting opportunities Is 2026 enough Volunteers in confusion