விஜய்யின் அரசியல் வருகையால் திமுக அச்சத்தில் உள்ளது! திமுக பக்கம் காய் நகர்த்திய நிர்மலா சீதாராமன்!
DMK is scared of Vijay political entry Nirmala Sitharaman has moved towards DMK
சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என நான்கு முனை போட்டி உருவாகி, அரசியல் கட்சிகள் தீவிரமான வியூகங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில், தவெக தலைவர் நடிகர் விஜய், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான திராவிடக் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே நேரத்தில், விஜய்க்கு பாஜக தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் மற்றும் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் போன்றவை, இந்த குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய், திமுக மற்றும் அதிமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும், பாஜக குறித்து நேரடியாக எந்த விமர்சனத்தையும் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “விஜயால் அரசியலில் எந்த பெரிய தாக்கமும் இல்லை. அவருடன் பாஜக எந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசினார். “விஜய்யின் அரசியல் வருகையைப் பார்த்து பாஜக பயப்படுகிறதா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜய்யை பார்த்து பயப்பட வேண்டியது பாஜக அல்ல, திமுகதான். திமுக பயப்படுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “ஒருபுறம் விஜய்யின் அரசியல் வருகை, மறுபுறம் அதிமுக – பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவடைவது ஆகிய இரண்டும் சேர்ந்து திமுகவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனால்தான் திமுக அரசு தொடர்ந்து இலவச திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கலாசாரம் தலைதூக்கியுள்ளது. ஆனால் அதற்கெதிராக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை” என கடுமையாக விமர்சித்தார்.
நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துகள், தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன. விஜய்யின் அரசியல் வருகை உண்மையில் யாருக்கு சவாலாக அமையும் என்பதும், அது தேர்தல் களத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும், வரும் நாட்களில் தெளிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
DMK is scared of Vijay political entry Nirmala Sitharaman has moved towards DMK