சொன்னது சொன்னது தான்! கூடுதல் தொகுதிகள் இல்லை! ஸ்டிரிக்டாக சொன்ன ஸ்டாலின்! அடைக்கப்பட்ட அறிவாலய கதவுகள்!
What was said is what was said No additional blocks Stalin said it strictly Closed doors of the knowledge center
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால், கூடுதல் தொகுதிகளை வழங்க முடியாது என்ற திமுக தலைமையின் உறுதியான நிலைப்பாடு, கூட்டணிக் கட்சிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வலுவான கூட்டணியை அமைத்து களமிறங்கிய திமுக, கடந்த தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றியது. அப்போது காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல சிறிய மற்றும் நடுத்தர கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்த முறை ஆளும் கட்சி என்ற பலத்துடன் தேர்தலை சந்திக்க தயாராகும் திமுக, கூட்டணியை மேலும் விரிவுபடுத்த முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதேபோல் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தேமுதிகவுக்கு 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படும் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.
மக்கள் நீதி மய்யம் தரப்பில், கட்சியை செயல்பாட்டில் வைத்திருக்கவும், நிர்வாகிகளை தேர்தல் களத்தில் இறக்கவும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் தேவை என வலியுறுத்தப்படுகிறது. ஆனால் திமுக தலைமையின் கணக்குப்படி, மநீமுக்கு 3 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட சில சிறிய கட்சிகளை கூட்டணிக்குள் இணைத்தால், அவர்களுக்கு 1 அல்லது 2 தொகுதிகள் வழங்கலாமா என்ற ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், நீண்ட காலமாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், இந்த முறை கூடுதல் தொகுதிகள் அல்லது குறைந்தபட்சம் இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையை முன்வைத்திருப்பது, திமுக தலைமையிடத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், எந்தவித ஆபத்தையும் எடுத்துக் கொள்ள விரும்பாத திமுக, கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட அதே தொகுதிகளையே பெரும்பாலான கூட்டணி கட்சிகளுக்கு மீண்டும் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு, கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இதனிடையே, புதிய கட்சிகளை கூட்டணிக்குள் சேர்ப்பது தொடர்பான பேச்சுகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து, அதன் பின்னர் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
முதற்கட்டமாக தேசிய கட்சியான காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டை இறுதிப்படுத்த திமுக முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரசுடன் உடன்பாடு ஏற்பட்டதும், மற்ற கூட்டணி கட்சிகளுடனும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான அனைத்து பணிகளையும் முடித்து, அதன் பின்னர் முழுமையாக பிரச்சார களத்தில் இறங்க வேண்டும் என்பதே திமுக தலைமையின் திட்டமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
What was said is what was said No additional blocks Stalin said it strictly Closed doors of the knowledge center