தொங்கு சட்டசபை அமைந்தால் என்ன நடக்கும்? ஆட்சி அமைப்பதில் ஆளுநரின் பங்கு என்ன?ஆளுநர் முதலில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார்!
What happens if there is a hung assembly What is the role of the governor in forming the government Who will the governor invite first to form the government
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெற உள்ளது. கடந்த ஒரு மாதமாக அரசியல் களத்தில் நிலவி வந்த பரபரப்புக்கு நாளை முடிவு கிடைக்க உள்ளது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டசபையில், ஆட்சியை அமைக்க 118 இடங்கள் அவசியம்.
இந்த நிலையில், எந்த ஒரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காமல் போனால் என்ன நடக்கும்? அப்படிப்பட்ட சூழலே ‘தொங்கு சட்டசபை’ (Hung Assembly) என அழைக்கப்படுகிறது.
ஒரு கட்சி அல்லது கூட்டணி, சட்டசபையின் மொத்த இடங்களில் பாதியைத் தாண்டி பெரும்பான்மை பெற முடியாத நிலையே தொங்கு சட்டசபை. உதாரணமாக, 234 இடங்களில் யாருக்கும் 118 எம்.எல்.ஏக்கள் இல்லையெனில், ஆட்சி அமைப்பது சிக்கலாகும்.
இந்த சூழலில் ஆளுநரின் முடிவு முக்கியமானதாகிறது. ஆனால் “அதிக இடங்கள் பெற்ற கட்சியைத்தான் முதலில் அழைக்க வேண்டும்” என்ற கட்டாய விதி அரசியலமைப்பில் இல்லை.
பொதுவாக நடைமுறையில் பின்பற்றப்படும் சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையில்:
-
தேர்தலுக்கு முன்பே அமைந்த கூட்டணி பெரும்பான்மை ஆதாரத்துடன் இருந்தால் முதலில் அவர்களுக்கு வாய்ப்பு.
-
அதிக இடங்கள் பெற்ற தனிப்பெரும் கட்சி, பிற கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் ஆட்சி கோரினால் அடுத்த வாய்ப்பு.
-
தேர்தலுக்குப் பிறகு உருவான கூட்டணி, பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு.
-
வெளியிலிருந்து ஆதரவு பெறும் சிறுபான்மை அரசுக்கும் சில சமயங்களில் வாய்ப்பு தரப்படலாம்.
ஆளுநர், “நிலையான அரசு அமைக்க யாரால் முடியும்?” என்ற அடிப்படையில் முடிவு எடுக்கலாம். இதனால், தொங்கு சட்டசபை சூழலில் அரசியல் பேச்சுவார்த்தைகள் தீவிரமாவது வழக்கம்.
ஆளுநர் அழைக்கும் தலைவர், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (பொதுவாக சில நாட்களில்) சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு (Floor Test) மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
ஆளுநரின் முடிவு ஒருதலைப்பட்சமாக உள்ளது என கட்சிகள் கருதினால், அவர்கள் உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தை அணுகலாம். கடந்த பல மாநிலங்களில் இதுபோன்ற வழக்குகள் நடந்துள்ளன.
எனவே, நாளைய முடிவுகள் வெறும் வெற்றி-தோல்வியை மட்டுமல்ல, தமிழகத்தின் அடுத்த அரசியல் சமன்பாடுகளையும் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும். தெளிவான பெரும்பான்மை வருமா அல்லது தொங்கு சட்டசபையா என்பதற்கான பதில் இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும்.
English Summary
What happens if there is a hung assembly What is the role of the governor in forming the government Who will the governor invite first to form the government