காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டு விசாரணை..? தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட கொத்தனார்; உறவினர்கள் மறியல் போராட்டம்..!
In Nagai a man taken into police custody for interrogation commits suicide by hanging
திருட்டு புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த சின்னதும்பூரை சேர்ந்தவர் 30 வயதான கார்த்திகேயன் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவர் திருத்துறைப்பூண்டியை அடுத்த எடையூர் சங்கதியில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவரின் மூன்று சவரன் தங்கச் செயினை காணவில்லை என எடையூர் சங்கதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கார்த்திகேயன் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணை முடிவில் கார்த்திகேயனை அவரின் அண்ணன் ஸ்ரீராம் அழைத்து வந்துள்ளார்.

ஆனால், வீட்டிற்கு வந்ததும் கார்த்திகேயன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நாகப்பட்டினத்தில் உள்ள ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று போலீசார் இளைஞர் கார்திகேயனை கொடூரமாக தாக்கியதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது, காவல் நிலையத்தில் விசாரணையின் போது அவரை நிர்வாணப்படுத்தி, வாயில் துணியை வைத்து கடுமையாக தாக்கியதாகவும், வெளியே வந்தவர் சிறுநீர் கழிக்க கூட முடியாமல் அவதியுறுள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதுகுறித்து, கார்த்திகேயன் அழுதுகொண்டே தனது அண்ணனிடம் தெரிவித்ததாகவும், இதனால், காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தி தாக்கியதை எண்ணி கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் உறவினர்கள் குற்றம் சட்டியுள்ளதோடு, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்குவோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வேளாங்கண்ணி காவல் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.
ஆனாலும், இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
English Summary
In Nagai a man taken into police custody for interrogation commits suicide by hanging