பெண்கள் பாதுகாப்பு என்னாச்சு...? - சிங்கப்பெண் படை குறித்து முதலமைச்சர் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பிய உதயநிதி...!
What about womens safety Udhayanidhi questions Chief Minister Vijay about Lion Guard
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களுக்குள் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள் மற்றும் 19 பாலியல் குற்றச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். செய்திகளில் வெளியாகியுள்ள சம்பவங்கள் மட்டுமே இவை எனவும், “மாற்றம்” என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்தவர்களின் நிர்வாகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக மாறியிருப்பதற்கான சாட்சிகளாக இந்த சம்பவங்கள் அமைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

கோவை சூலூரில் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளாத நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது வேதனையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும், சூலூர் சிறுமியின் தாயாருக்கு முழுமையான தகவல் தெரிவிக்காமல் அவசரமாக உடல் தகனம் செய்யப்பட்டதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், கோவையில் இளம்பெண் ஒருவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல் அமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரிலேயே போதை கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் நடத்தியிருப்பது சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் உச்சம் என தெரிவித்துள்ளார்.
“இது தமிழ்நாடா? உத்தரபிரதேசமா?” என கேள்வி எழுப்பியுள்ள உதயநிதி ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பு வீர வசனங்கள் பேசிய முதல் அமைச்சர் தற்போது ஏன் மவுனமாக உள்ளார் என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் அச்சத்திலும் பதற்றத்திலும் வாழும் சூழலில், கண்துடைப்புக்காக கூட்டங்கள் நடத்தி பொதுவான அறிக்கைகள் வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சாடியுள்ளார்.
நிலைமையின் தீவிரத்தை அரசு முதலில் உணர வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முதல் அமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதற்கு நேரடியாக பதில் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தனது பதிவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
What about womens safety Udhayanidhi questions Chief Minister Vijay about Lion Guard