'தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்': வி.பி.துரைசாமி நம்பிக்கை..!
VP Duraisamy is confident that the BJP alliance will win the Tamil Nadu Assembly elections and form the government
தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், இன்று நாமக்கல் மணிக்கூண்டு அருகில் பீஹார் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட பாஜ தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இவருடன் பாஜக மாநில துணைத் தலைரும், ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான வி.பி.துரைசாமி கலந்துகொண்டு பிர்சா முண்டாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி கூறியதாவது: பீஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும். நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் திமுக ஆட்சியை மக்கள் விரும்பவில்லை என்றும், அவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார். வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் திருத்தத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் ஆணையம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அது ஒரு சுதந்திரமான அமைப்பு. அவர்கள் சட்டப்படி 14 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணியை மேற்கொண்டுள்ளனர். இதை திமுக எதிர்ப்பது தங்களின் சுய லாபத்திற்காகத்தான் என்று விமர்சித்துள்ளார்.

மேலும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளது என்றும் இது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்பதால் நாங்கள் அதில் தலையிட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அத்துடன், இந்தியாவை பிரதமர் மோடி வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கிறார் என்றும் இதை தமிழக இளைஞர்களும், பெண்களும் பொதுமக்களும் மிகவும் விரும்புகின்றனர். எனவே பீஹார் சட்டப்பேரவை தேர்தலைப் போல் தமிழக சட்டசபை தேர்தலிலும் பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
VP Duraisamy is confident that the BJP alliance will win the Tamil Nadu Assembly elections and form the government