கமல்ஹாசனின் 6 கோரிக்கையை நிராகரித்த விஜய்! விஜய் மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்! ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல்?
Vijay rejected Kamal Haasan 6 requests 6 warning reports came to Vijay table Only one was approved
மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன், அண்மையில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். இந்த கோரிக்கைகள் குறித்து அரசு தரப்பில் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், அவற்றில் ஒன்றுக்கு மட்டும் பகுதியளவு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்ற கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசன் முன்வைத்த கோரிக்கைகளில், தமிழக அரசே ஓடிடி தளத்தை உருவாக்க வேண்டும், திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் 4 சதவீத உள்ளாட்சி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், இணைய திருட்டைத் தடுக்க காவல்துறையில் தனிப்படை அமைக்க வேண்டும், தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும், ஓடிடி வெளியீட்டுக்கு 8 வார கட்டுப்பாடு விதிக்க வேண்டும் மற்றும் திரைப்பட தயாரிப்பு செலவில் 10 சதவீதத்தை மானியமாக வழங்க வேண்டும் என்பன இடம்பெற்றிருந்தன.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக நிதித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயரதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் அளித்த அறிக்கைகளில், மாநில அரசு நேரடியாக ஓடிடி தளம் தொடங்குவதற்கு சட்ட மற்றும் நிதி ரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும், தற்போது இயங்கி வரும் தமிழ்நாடு கேபிள் நிறுவனமே சவால்களை சந்தித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திரைப்படங்களுக்கான உள்ளாட்சி வரியை முழுமையாக ரத்து செய்தால் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயில் பாதிப்பு ஏற்படும் என்றும், இணைய திருட்டைத் தடுப்பதற்காக தனிப்படை அமைப்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஓடிடி வெளியீட்டுக்கான 8 வார கட்டுப்பாடு மற்றும் தயாரிப்பு செலவின் 10 சதவீத மானியம் வழங்குவது போன்ற கோரிக்கைகளும் அரசின் தற்போதைய நிதிநிலையை கருத்தில் கொண்டால் செயல்படுத்த இயலாது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கும் கோரிக்கையில் மட்டும் சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய திரைப்படங்கள் வெளியாகும் தொடக்க நாட்கள் மற்றும் விடுமுறை அல்லது பண்டிகை காலங்களில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அல்லது முதலமைச்சர் அலுவலகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அதனால், கமல்ஹாசனின் கோரிக்கைகள் குறித்த இறுதி நிலைப்பாடு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
English Summary
Vijay rejected Kamal Haasan 6 requests 6 warning reports came to Vijay table Only one was approved