விஜய்–ஓபிஎஸ் ரகசிய பேச்சு? 20 நிமிடம் நடந்த அந்த உரையாடல்? என்னங்க சொல்றீங்க? முக்கிய முடிவு
Vijay OPS secret talk That 20 minute conversation What do you think The main conclusion
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் (TVK) உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நடிகர் விஜயுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் பிடிகொடுக்காமல் இருந்த விஜய், பின்னர் ஓபிஎஸ் உடன் நீண்ட நேரம் பேசியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முதலமைச்சர் வேட்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை ஏற்க முடியாது என்று, டிடிவி தினகரன் போலவே ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பு தற்போது திமுக அல்லது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
சமீபத்தில் சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில், “யாருடன் கூட்டணி வைக்க வேண்டும்?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், தவெக அல்லது திமுக என்ற இரண்டு விருப்பங்கள் மட்டும் வழங்கப்பட்டன. அந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் இனி இணைப்பு இல்லை என்ற முடிவு தெளிவாக எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
மாவட்ட செயலாளர்களின் கருத்து கேட்கப்பட்டபோது, பெரும்பாலானோர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கவே விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தான், தவெகவுடன் கூட்டணி விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வம் நேரடியாக விஜயுடன் தொலைபேசி மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரையாடல் சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள், டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவருடனும் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தியுள்ளன. “டிடிவியுடனும் பேசிக் கொண்டிருக்கிறோம், ஓ. பன்னீர்செல்வத்துடனும் பேசியுள்ளோம். விரைவில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும்” என தவெக வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் NDA-வில் இணைய மறுக்கும் பட்சத்தில், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழக அரசியலில் பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய முக்குலத்தோர் சமூக வாக்குகள் மேலும் அந்நியப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. அந்த சமூக ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்திற்கு திரும்பும் பட்சத்தில், தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் விஜய்க்கு அது குறிப்பிடத்தக்க பலமாக அமையும் என்றும் கணிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், விஜய்–ஓபிஎஸ் பேச்சுவார்த்தை குறித்த தகவல், 2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
English Summary
Vijay OPS secret talk That 20 minute conversation What do you think The main conclusion