தமிழ் வரலாறு மீது விஜய்க்கு அலட்சியமா...? - பிரதமரை பாராட்டாத முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கண்டனம்...!
Vijay indifferent Tamil history Vanathi Srinivasan condemns Chief Minister not praising Prime Minister
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளப் பதிவில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், “இதுதானா நீங்கள் கூறும் நாகரிக அரசியல்?” என கேள்வி எழுப்பிய அவர், தமிழர்களின் தொன்மைச் சின்னமாக விளங்கிய சோழர் வரலாற்றை 300 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அரங்கில் மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு இதுவரை பாராட்டு தெரிவிக்காதது வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து மீட்கப்பட்டு தாயகம் திரும்பியிருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை ஒட்டுமொத்த தமிழகமும் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்ற முறையில் இதுவரை எந்தவித வரவேற்போ, பாராட்டோ தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” என அவர் சாடியுள்ளார்.
அதேபோல், “இது சாதாரண மறதி அல்ல; திட்டமிட்ட புறக்கணிப்பு போல தெரிகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற விஷயங்களில் உடனடியாக கருத்து வெளியிடும் அரசு, தமிழ் பண்பாட்டு பெருமையை உலக அரங்கில் மீண்டும் உயர்த்திய இந்த நிகழ்வுக்கு ஒரு வார்த்தை நன்றி கூட தெரிவிக்க தயங்குவது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, “மாற்றம் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசின் செயல்பாடுகள், முந்தைய திமுக ஆட்சியிலிருந்து எந்த வேறுபாடையும் காட்டவில்லை.
தமிழர் பாரம்பரியத்தை முன்னிறுத்தி பேசும் நீங்கள், நமது வரலாற்றுச் சின்னங்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பும் தருணத்தில் பாராட்டு தெரிவிக்காமல் இருப்பது எந்த வகையிலான நாகரிக அரசியல்?” என விமர்சித்துள்ளார்.
இறுதியாக, “இந்த செப்பேடுகள் தமிழகத்திற்கு வரவுள்ள நாளை அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடி, தமிழர் வரலாற்றின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Vijay indifferent Tamil history Vanathi Srinivasan condemns Chief Minister not praising Prime Minister