''தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றுவாரா? இரவு பகலாக விவசாயிகள் போராடுவது ஏன்?''; தவாக வேல்முருகன் கேள்வி..!
Velmurugan urges for a complete waiver of crop loans
''விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையான பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் நீர்ப்பாசனப் பிரச்சினைக்கும், நெல் கொள்முதல் தொடர்பான சிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டும். தேர்தல் காலத்தில் விவசாயிகளிடம் அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி, உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.'' என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
''திருச்சி சமயபுரத்தில் விவசாயிகள், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற முதன்மையான கோரிக்கையை முன்வைத்து இரவு பகலாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் பிரச்சினை பயிர்க்கடனோடு மட்டும் முடிந்துவிடவில்லை.
சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல், அவர்கள் பெரும் செலவில் விளைவித்த நெல்லை அரசு உரிய முறையில் கொள்முதல் செய்வதில் காணப்படும் பிரச்சினைகள் என பல்வேறு நெருக்கடிகளையும் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், ஏற்கெனவே சுமந்து வரும் கடன் மேலும் பெருகி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளுகிறது.
மழை, வறட்சி, நீர்ப்பற்றாக்குறை, உற்பத்திச் செலவு உயர்வு, இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, விளைபொருளுக்கான உரிய விலை கிடைக்காத நிலை என ஆண்டுதோறும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு விவசாயம் செய்யும் உழவர்களுக்கு, பயிர்க்கடன் என்பது சாதாரண நிதிச் சுமை அல்ல. அது அவர்களின் குடும்ப வாழ்க்கையையும் அடுத்தடுத்த சாகுபடி காலத்தையும் பாதிக்கும் பெரும் சுமையாக மாறுகிறது.
ஒருபுறம், பயிரிடுவதற்குத் தேவையான நீருக்காகப் போராட வேண்டிய நிலை. மறுபுறம், விளைவித்த நெல்லை முறையாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்த வேண்டிய கட்டாயம். இதற்கிடையே, சாகுபடிக்காகப் பெற்ற கடனைச் செலுத்த முடியாமல் தவிக்கும் நிலை. இவை அனைத்தும் விவசாயிகளின் நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன.
விவசாயிகள் உணவை உற்பத்தி செய்து மக்களின் பசியைப் போக்குகின்றனர். ஆனால் அவர்களது உழைப்புக்கான பாதுகாப்பையும், விளைபொருளுக்கான உரிய கொள்முதலையும், கடன் சுமையிலிருந்து விடுதலையையும் உறுதி செய்வது அரசின் பொறுப்பு.
தேர்தலுக்கு முன்பாக விவசாயிகளிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் தேர்தல் பரப்புரை வார்த்தைகளாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அவை செயல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தெளிவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
சமயபுரத்தில் போராடி வரும் விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையான பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்து தமிழக அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதோடு, சாகுபடிக்குத் தேவையான நீரை உறுதி செய்வதற்கும், விவசாயிகள் விளைவித்த நெல்லை காலதாமதமின்றி முறையாகக் கொள்முதல் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தனித்தனியாகப் போராட்டக் களத்திற்கு வர வேண்டிய நிலை முடிவுக்கு வர வேண்டும். அவர்களின் உழைப்புக்குப் பாதுகாப்பும், விளைபொருளுக்கு உரிய சந்தையும், வாழ்வாதாரத்திற்கு நிலைத்தன்மையும் உருவாக்கப்பட வேண்டும்.
சமயபுரத்தில் இரவு பகலாகக் காத்திருக்கும் விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையான பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் நீர்ப்பாசனப் பிரச்சினைக்கும், நெல் கொள்முதல் தொடர்பான சிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டும். தேர்தல் காலத்தில் விவசாயிகளிடம் அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி, உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Velmurugan urges for a complete waiver of crop loans