நீட் தேர்வு விலக்கு, தீர்மானம் மட்டும் போதுமா? தமிழ்நாட்டின் மாநில உரிமையை நிலைநாட்டுவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? ; வேல்முருகன் கேள்வி..!
Velmurugan says the Tamil Nadu govt should take steps to permanently exempt TN from the NEET exam
''நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.'' என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
''நீட் தேர்வுக்கு எதிராகவும், கல்வி மீதான மாநிலங்களின் உரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.
குறிப்பாக, இக்கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 11 நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புளியந்தோப்பு மோகன், ரவி, ஜீவா, தனசேகர் ஆகிய 4 பேரின் உறுதியையும், அர்ப்பணிப்பையும் இத்தருணத்தில் நினைவுக்கூர வேண்டியது அவசியமாகும்.
கல்வி என்பது ஒரு மாநிலத்தின் சமூக அமைப்பு, பொருளாதார முன்னேற்றம், மொழி, பண்பாடு, சமூகநீதி மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தோடு பின்னிப் பிணைந்தது. எனவே, கல்வி தொடர்பான முக்கியமான கொள்கை முடிவுகளில் மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான மாநில உரிமை கோரிக்கையாகும்.
எனவே, தமிழக அரசு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு பெறுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர மத்திய அரசிடம் வலுவான அரசியல் அழுத்தத்தை உருவாக்க வேண்டும்.
நீட் விலக்கும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரும் கோரிக்கையும் நடைமுறைக்கு வரும் வரை தமிழக அரசு எந்தத் தயக்கமும் இன்றி, தனது அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்தை தொடர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Velmurugan says the Tamil Nadu govt should take steps to permanently exempt TN from the NEET exam