முள்ளிவாய்க்கால் நினைவுகளை அவமதிக்கும் வகையில் தமிழர்களைக் குற்றம் சாட்டும் வட இந்திய ஊடக அரசியலுக்கு வேல்முருகன் கண்டனம்..!
Velmurugan Condemns North Indian Media Politics That Accuse Tamils in a Manner Disrespectful to the Memories of Mullivaikkal
''முள்ளிவாய்க்கால் நினைவுகளை அவமதிக்கும் வகையில் தமிழர்களைக் குற்றம்சாட்டும் வடஇந்திய ஊடக அரசியலை வன்மையாக கண்டிக்கிறோம்'' என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட துயரம் இன்று வரை உலகத் தமிழர்களின் இதயத்தில் ஆறாத காயமாகவே உள்ளது. முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது தமிழர் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாற்று வேதனை.

அந்தத் துயர நினைவுகளை மனதில் ஏந்தி தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட “முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம். கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்” என்ற பதிவு மனிதாபிமானத்தின் அடிப்படையிலான உணர்வுப்பூர்வமான வெளிப்பாடே அன்றி, எந்தவிதத் தீவிரவாத ஆதரவும் அல்ல என்பதை நாங்கள் உறுதியாக பதிவு செய்கிறோம்.
ஆனால், சில வடஇந்திய ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் அந்தப் பதிவைத் திரித்து, தமிழர்களின் இன உணர்வையும் மனிதநேயக் குரலையும் தீவிரவாத அரசியல் என்பது போன்று விவாதிப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல. தமிழர்களின் வரலாற்று வலியையே அவமதிக்கும் செயலாகும்.
ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு என்பது இன்று தோன்றிய ஒன்று அல்ல. பல தசாப்தங்களாகத் தமிழகத்தின் அரசியல், மாணவர், சமூக, மனித உரிமை இயக்கங்கள் அனைத்தும் ஈழத் தமிழர்களின் உயிர் பாதுகாப்பு, அரசியல் உரிமை மற்றும் நீதி வேண்டி குரல் கொடுத்து வருகின்றன. அது தமிழின உணர்வு. அது தாய்மொழி சார்ந்த உறவு. அது தொப்புள் கொடிரத்த சொந்தம். எனவே, முள்ளிவாய்க்கால் நினைவுகளை அவமதிக்கும் வகையில் தமிழர்களைக் குற்றம்சாட்டும் வடஇந்திய ஊடக அரசியலை வன்மையாக கண்டிக்கிறோம்'' என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Velmurugan Condemns North Indian Media Politics That Accuse Tamils in a Manner Disrespectful to the Memories of Mullivaikkal