'முதல்வர் ஸ்டாலின் ஹிந்துக்களை பார்த்து அவதுாறு பேசி வருகிறார்'; மத்திய அமைச்சர் முருகன்..!
Union Minister Murugan says that Chief Minister Stalin is making derogatory remarks against Hindus
'தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்' எனும் தேர்தல் பிரசார பயணத்தை தமிழகம் முழுவதும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி., பகுதியில், பிரசார பயணத்தின் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் முருகன் பேசியதாவது:
பா.ஜ.,வுக்கு ஆதரவான மக்களின் எழுச்சி அதிகரித்துள்ளதாகவும், 'தி.மு.க., ஆட்சி வேண்டாம்' என, மக்கள் முடிவு செய்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், நீலகிரியை சேர்ந்த வீராங்கனையோடு பிரதமர் மோடி பேசியது இந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த தேர்தலில், 511 வாக்குறுதிகளை தி.மு.க., அளித்தது. ஆனால், 51 வாக்குறுதியை கூட தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில், 04 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், தற்போது ஒன்பது லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது என்றும், கிறிஸ்தவ, இஸ்லாமிய விழாக்களுக்கு மட்டும் செல்லும் முதல்வர் ஸ்டாலின், நம்மை (ஹிந்துக்கள்) பார்த்து அவதுாறு பேசி வருகிறார் என்று கூறியுள்ளார்.
இவரை தொடர்ந்து, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில் கூறியதாவது; மத்திய அமைச்சர் முருகன் நடத்திய வேல் யாத்திரை, முன்னாள் தலைவர் அண்ணாமலையின் 'என் மண்; என் மக்கள்' யாத்திரை ஆகியவற்றால், தமிழகத்தில், 18 சதவீதமாக, பா.ஜ., வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபம் ஏற்றியே தீர வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சமீப காலமாக, தமிழக மக்களிடையே எழுந்துள்ள எழுச்சி, வரும் தேர்தலின் போது ஓட்டுப்பதிவிலும் நீடிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

தொடர்ந்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், ஊட்டி உட்பட 11 இடங்களில் மருத்துவக் கல்லுாரிகள் கொண்டு வரப்பட்டன. தற்போது, கடன்கார மாநிலமாக, குடிகார மாநிலமாக, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்த ஐந்தாண்டுகளில், 60 சதவீதம் இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றும், அந்த பொறுப்பு நமக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 2026-இல் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் போது இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Union Minister Murugan says that Chief Minister Stalin is making derogatory remarks against Hindus