தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்...! - குறுவை சாகுபடி குறித்து டிடிவி தினகரன் விடுத்துள்ள முக்கிய அறிக்கை...!
Uninterrupted three phase electricity should be provided TTV Dhinakaran important statement Kuruvai cultivation
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்திருப்பதாவது,"காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பொருளாதாரத்திற்கும், இலட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் முதுகெலும்பாக விளங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 80 அடிக்கும் கீழே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் குறுவை சாகுபடிக்கான நீர் இந்த ஆண்டு திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.கடந்த ஆண்டு சுமார் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த ஆண்டு உரிய நேரத்தில் நீர் திறக்கப்படாத சூழல் உருவாகியிருப்பது டெல்டா விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் குறுவை சாகுபடியின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததுடன், கர்நாடக மாநிலத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களிலும் நீர் இருப்பு குறைந்துள்ளதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதற்கான வாய்ப்பு மங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக விவசாயம் மட்டுமல்லாமல், விவசாயத்தை நம்பியிருக்கும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வருவாயும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இத்தகைய நெருக்கடியான சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய குறுவை சாகுபடி சிறப்புத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதுடன், நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடையே வலுத்து வருகிறது.
குறிப்பாக திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியான மின்தடைகள் காரணமாக மின் மோட்டார்கள் செயலிழப்பதும், போதிய நீர்ப்பாசனம் கிடைக்காததால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் வாடி சேதமடைவதும் விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
அதேநேரத்தில், டெல்டா மாவட்டங்களைத் தாண்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படாமல் கொள்முதல் நிலையங்களிலேயே தேக்கமடைந்து கிடப்பதாகவும், விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் நிலுவையில் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எனவே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள தமிழக வெற்றிக்கழக அரசின் தலைவர் ஜோசப் விஜய், டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், காங்கிரஸ் தலைமைத்துவத்துடன் ஆலோசனை நடத்தி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை காலதாமதமின்றி திறந்து விட கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தை வழங்க வேண்டும்.
அத்துடன், காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் திட்டத்தில் கர்நாடக அரசு கடைப்பிடித்து வரும் பிடிவாதமான நிலைப்பாட்டை கைவிடும் வகையில் உறுதியான உத்தரவாதத்தையும் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்"எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Uninterrupted three phase electricity should be provided TTV Dhinakaran important statement Kuruvai cultivation