திமுக எம்எல்ஏக்களைப் பார்த்தால் வழக்கு; அதிமுக எம்எல்ஏக்களைப் பார்த்தால் பெட்டி; தவெக விமர்சித்து தாராபுரத்தில் உதயநிதி பேச்சு..!
Udhayanidhi speaking in Dharapuram criticized TVK for claiming that DMK MLAs face legal cases while AIADMK MLAs receive cash filled boxes
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது 'நேற்று மதுராந்தகத்தில் 30 நிமிடம் பேசிய முதல்வர் விஜய், 32 முறை 'திமுக' என உச்சரித்தார். அந்தளவுக்கு திமுக மீது பயம்' என்று விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், திமுக ஆதரவுடன் வென்ற கட்சிகளின் ஆதரவுடன்தான் தவெக ஆட்சி நடக்கிறது என்றும், திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற சிலர் எதுவுமே சொல்லாமல் திருட்டுத்தனமாக சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், கூட்டணிக் கட்சியினர் சிலர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு சென்றனர். சிலர் முதுகில் குத்திவிட்டுச் சென்றனர். எல்லா கட்சித் தலைவர் வீட்டுக்கும் முதல்வரே சென்று சோஃபா டெலிவரி செய்தார் என்று விமர்சித்துள்ளார்.
அதாவது, தலைவர்கள் அனைவருக்கும் சோஃபா. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எல்லாம் பெட்டி. தவெக ஆட்சி வந்ததில் இருந்து திமுக எம்எல்ஏக்களைப் பார்த்தால் வழக்குப் போடுகின்றனர். அதிமுக எம்எல்ஏக்களைப் பார்த்தால் பெட்டி கொடுக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டப்பேரவையில் சபாநாயகர் ஆக்ஷன் சொன்னால் விஜய் நடிக்க ஆரம்பித்து விடுகிறார் என்றும், நீங்கள் மறுபடியும் பாமாவை ஜெயிக்க வைத்தீர்கள் என்றால், சட்டப்பேரவைக்கு சென்று பாட்டுதான் பாடுவார்கள். இல்லையெனில் ரீல்ஸ் போடுவார்கள். அதிமுக வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்றால், மீண்டும் பெட்டி வாங்கிக் கொண்டு, கட்சி மாறிவிடுவார்கள் என்று பிரச்சாரம் செய்துள்ளார்.
அத்துடன், மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரத்தில் 30 நிமிடம் பேசிய முதல்வர் விஜய், 32 முறை 'திமுக.. திமுக.. திமுக..' என கத்துகிறார். நாம் கூட திமுக-வைப் பற்றி அவ்வளவு பேசியிருக்க மாட்டோம். அந்தளவுக்கு முதல்வருக்கு திமுக மீது பயம் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 07 பேரை பெட்டி கொடுத்து தூக்கியுள்ளது தவெக. எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற 10 நாட்களில் ராஜினாமா செய்து, குதிரை பேரம் மூலமாக கட்சி மாறியுள்ளனர். கடந்த முறை எந்தச் சின்னத்தில் வாக்களித்தீர்களோ அதே நபர்களை மீண்டும் வேட்பாளராக நிறுத்தி மக்கள் வாக்களிப்பார்கள் என நம்புகிறது தவெக. அவர்களுக்கே மீண்டும் வாக்களித்தீர்கள் என்றால் உங்களுக்காக அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தவெக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ரெண்டு பேருக்குதான் போட்டி ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு என்று விமர்சித்துள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.சுகன்யா நன்கு படித்தவர் என்றும், சட்டமன்றத்தில் இந்தப்பகுதி மக்களுக்காக குரல்கொடுக்கக் கூடியவர். அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார்.
English Summary
Udhayanidhi speaking in Dharapuram criticized TVK for claiming that DMK MLAs face legal cases while AIADMK MLAs receive cash filled boxes