கேரளாவில் தவெகவின் அடுத்த அதிரடி... நடிகர் தேவனுக்கு முக்கியப் பொறுப்பா...?
Tvk next move Kerala Is actor Devan responsible main task
தமிழக அரசியலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், தனது அரசியல் பயணத்தை தென்மாநிலங்களிலும் விரிவுபடுத்தும் நோக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகளில் தவெக கவனம் செலுத்தி வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர் தேவன் கட்சியில் இணைய இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத் திரையுலகில் நீண்ட காலமாக பயணித்து வரும் நடிகர் தேவன், 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் பாட்ஷா, வாத்தியார், ஆதி, சிவகாசி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வந்த தேவன், கடந்த 2024-ம் ஆண்டு ‘கேரளா மக்கள் கட்சி’ என்ற அமைப்பை தொடங்கினார்.
பின்னர் அவர் பா.ஜ.க.வில் இணைந்தார். இதையடுத்து, கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.கடந்த 2 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் செயல்பட்டு வந்த தேவன், கடந்த 17-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
கட்சிக்காக கடுமையாக உழைத்த போதிலும், தனக்கு உரிய முக்கியத்துவமும் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், இதன் காரணமாகவே கட்சியில் இருந்து வெளியேறியதாக தெரிவித்திருந்தார்.பா.ஜ.க.வில் இருந்து விலகியுள்ள நடிகர் தேவன், தற்போது தனது அரசியல் பயணத்தில் அடுத்தகட்டமாக தவெகவை நோக்கி நகர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, வரும் 10-ம் தேதி சென்னை வர உள்ள தேவன், தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது கேரளாவில் தவெகவின் அரசியல் பணிகளை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கேரளாவில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் தேவனுக்கு தவெக மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், கேரள அரசியலில் தவெகவின் விரிவாக்க முயற்சிக்கு இது முக்கியமான நகர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Tvk next move Kerala Is actor Devan responsible main task