தமிழக சட்டசபையில் இன்று 3 முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம்.. புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?
Debate on demands for grants for three key departments in the Tamil Nadu Assembly today will new announcements be made
தமிழக சட்டசபையில் இன்று இயற்கை வளங்கள், தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய 3 முக்கிய துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த கோரிக்கைகளுடன், பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் அவையில் எழுப்ப உள்ளதால், இன்றைய கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 6-ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 7, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சனும், வேளாண்மை அமைச்சர் வினோத்தும் பதிலுரை வழங்கினர்.
இதையடுத்து தற்போது துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஆகிய 3 துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளனர்.
இயற்கை வளங்கள் துறை தொடர்பான விவாதத்தில் கனிம வளங்களை பாதுகாப்பது, இயற்கை வளங்களின் பயன்பாடு, அவற்றை முறையாக நிர்வகிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் எழுப்பப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக கனிம வளங்களை சட்டவிரோதமாக எடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை மீதான விவாதமும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் நிறுவனங்களை உருவாக்குவது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் அரசிடம் விளக்கம் கேட்க உள்ளனர்.
அதேபோல் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான விவாதத்தில், அரசு சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்குவது, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, பொதுமக்களுக்கு அரசு சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட உள்ளன.
இதுதவிர, இன்று சட்டசபையில் 2 கவன ஈர்ப்பு தீர்மானங்களும் கொண்டுவரப்பட உள்ளன. தமிழகத்தில் ஹீமோபிலியா மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமிசிஸுமாப் மருந்தை இலவசமாக வழங்குவது தொடர்பாக தவெக எம்எல்ஏ டாக்டர் எம்.எஸ். ரவி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார்.
மேலும், பழனி தொகுதிக்குட்பட்ட ஆயக்குடி பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மாணவியர் விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்பது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ கு. ரவி மனோகரன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார்.
இந்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் சட்டசபையில் பதில் அளிக்க உள்ளனர். இதனால் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்களைத் தாண்டி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளும் இன்று சட்டசபையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளிக்கும் பதில்களின்போது புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
English Summary
Debate on demands for grants for three key departments in the Tamil Nadu Assembly today will new announcements be made