"சாதியைச் சொல்லி உள்ளே விட மறுத்தனர்!": புதுச்சேரி தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராக தவெக எம்.எல்.ஏ சாய் ஜெ. சரவணகுமார் பிசிஆர் செல்லில் புகார்!
TVK MLA Files Caste Discrimination Complaint Against Puducherry Factory Management After Heated Standoff
புதுச்சேரி அடுத்த திருபுவனை தொழில்பேட்டையில் இயங்கி வரும் ஒரு தனியார் தொழிற்சாலைக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான தவெகவைச் சேர்ந்த சாய் ஜெ. சரவணகுமார் நேரில் ஆய்வு செய்யச் சென்றபோது பெரும் சர்ச்சை உருவானது. அப்போது, 'எந்த அதிகாரத்தில் உள்ளே வருகிறீர்கள்?' எனக் கேட்டுத் தொழிற்சாலை நிர்வாகத்தினர் அவரைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாகத் தொழிற்சாலை அதிகாரி சிவராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், திருபுவனை காவல் துறையினர் எம்.எல்.ஏ சாய் ஜெ. சரவணகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிசிஆர் செல்லில் எம்.எல்.ஏ அளித்த எதிர் புகார்
இதைத் தொடர்ந்து, சாதிய பாகுபாடு காட்டித் தன்னை உள்ளே செல்ல விடாமல் தடுத்ததாகக் கூறி, புதுச்சேரி பிசிஆர் செல்லில் (PCR Cell) எம்.எல்.ஏ சாய் ஜெ. சரவணகுமார் இன்று அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கியத் தகவல்கள்:
ஆய்விற்கான காரணம்: அக் குறிப்பிட்ட தனியார் தொழிற்சாலையில் பட்டியலினத் தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், பெண் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்தன. மேலும், அப்பகுதி பொதுக் குளம் மற்றும் கோவில் நிலங்களை நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
முன்னறிவிப்பும் தடுத்தலும்: காவல் துறை, கொம்யூன் அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு முறைப்படி தகவல் தெரிவித்தே தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் ஆய்வுக்குச் சென்றேன். ஆனால், நிறுவனத்தின் ஹெச்.ஆர் மேலாளர்கள் அருண்குமார், சிவசங்கர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் என்னை உள்ளே விடாமல் தடுத்தனர்.
சாதிய பாகுபாடு குற்றச்சாட்டு: பட்டியலினத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ என்பதால் நிறுவனத்திற்குள் வரக் கூடாது எனக் கூறித் தடுத்து, காவலாளி அறையில் அமரவைத்து வாக்குவாதம் செய்தனர். சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக அங்கிருந்து அமைதியாக வெளியேறினேன்.
கைது செய்யக் கோரிக்கை
சாதியின் அடிப்படையில் தன்னைத் தடுத்த ஹெச்.ஆர் மேலாளர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார். இச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
TVK MLA Files Caste Discrimination Complaint Against Puducherry Factory Management After Heated Standoff