'எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுகவின் காவிரி பிரச்சினையில் கபட நாடகத்தை மக்கள் ஏற்பார்களா..?' மு.க.ஸ்டாலினுக்கு தவெக தக்க பதிலடி..!
TVK gives a befitting reply to MK Stalin saying that people will not indulge in a false drama on the Cauvery issue
''மேகேதாட்டு விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர் விஜய். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?''என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருந்தார்.
இதற்கு தவெக எதிர்வினையாற்றியுள்ளது. அதாவது, ''கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்'' என தவெக பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்து தவெக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''விவசாயிகள் நலன்களுக்காகவும், கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் தமிழக முதல்வர் விஜய்யின் மனசாட்சி உள்ள மக்களாட்சி. திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் தலைவர்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக?
அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக் கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்த திமுக.
ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சத்தம் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும்.

எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
எனவே, காவிரிப் பிரச்சனையில் ஸ்டாலினின், திமுக ஆட்சி போய்விட்டதே, தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TVK gives a befitting reply to MK Stalin saying that people will not indulge in a false drama on the Cauvery issue