சிறைப்பிடிக்கப்பட்ட அரசுப் பேருந்து! சித்ரவதைக்கு ஆளாகும் பயணிகள் - தவெக!
TVK DMk Govt
தவெக ஐடி விங்க் விடுத்துள்ள கண்டன செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், நங்கிலிகொண்டான் சுங்கச்சாவடிக்கு செலுத்த வேண்டிய 65 லட்சம் ரூபாய் கட்டண பாக்கியால், அரசு பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
செஞ்சி அருகே உள்ள நங்கிலிகொண்டான் சுங்கச்சாவடிக்கு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் பணிமனை சார்பில் 65 லட்சம் ரூபாய் கட்டண பாக்கி உள்ளது. இதனால், அரசு பேருந்துகளை சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்துவது அடிக்கடி நடப்பதால், அந்த பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகம் தரப்பில், “விரைவில் பணம் செலுத்தப்படும்” என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எப்போது என்று தெரியவில்லை.
"தமிழ்நாட்டு மக்களை தலைகுனிய விடமாட்டேன்" என மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து தமிழ் மக்களை தலைகுனிய வைத்தே வருகிறார். கோடிகளில் ஊழல் செய்ததாக திமுகவினர் மீது புகார்கள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில், மக்கள் சேவைக்கான கட்டணத்தைக் கூட செலுத்தாமல் இழுத்தடித்து வருவது மக்கள் விரோத போக்கையே காட்டுகிறது.
மேலும் அதன் மற்றும் ஒரு செய்திக்குறிப்பில், "தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்த நெல்மணிகளை உரியக் காலத்தில் கொள்முதல் செய்யாதது, சரியான கொள்முதல் விலை வழங்காதது போன்ற திமுக அரசின் ஆணவப் போக்கால், பருவமழையில் நெல்மணிகள் பாழான பரிதாப நிலையினை பார்த்தோம்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி தேவையான நிவாரணத் தொகையை இன்னும் வழங்காத திமுக அரசு, அவர்கள் படும் வேதனையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளின் வாக்குரிமையை அச்சுறுத்தும் போக்காக, SIR என்ற சுமையை இந்த இக்கட்டான சூழலில் மேற்கொண்டு வருகிறார்கள். குறுகிய காலத்தில் இதுபோன்ற நடைமுறையை ஏன் இவ்வளவு அவசரமாகச் செய்ய வேண்டும் என்ற மக்களின் குரலுக்குச் செவிமடுப்பதாக இல்லை தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசும். மற்றொருபுறம், பருவமழை தீவிரமாக இருக்கும் என்று சொல்லப்படும் நேரத்தில் அதற்கான எந்தவொரு எச்சரிக்கை நடவடிக்கையையும் திமுக அரசு எடுப்பதாகவே தெரியவில்லை என்று கண்ணீர் சிந்துகிறார்கள் விவசாயிகள்.
மக்களின் வாக்குரிமையும் வாழ்வாதார உரிமையும் எந்தவித அலட்சியத்திற்கும் இடமின்றி ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்கள் கேட்கும் நிவாரண தொகையை விரைந்து வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.