கொடநாடு வழக்கு || தேனியில் கைகோர்க்கும் ஓ.பி.எஸ், டி.டி.வி.!! திடீர் அறிவிப்பால் ஈபிஸ்.,க்கு நெருக்கடி.!
TTV participates in OPS team protest regarding KodaNadu case
ஓபிஎஸ் அணியினர் சார்பில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி தமிழக முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கு செயல்படும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சில மாதங்களுக்கு முன்பு டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்த பன்னீர்செல்வம் இருவரும் அரசியலில் இணைந்து செயல்பட போவதாக கூட்டாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் ரீதியில் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் டிடிவி தினகரன் களமிறங்கியுள்ளார்.
ஓபிஎஸ் அணியினர் சார்பில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொரநாட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஆட்சிக்கு வந்து 90 நாட்களுக்குள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் இவ்வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத வகையில் மெத்தனப் போக்கோடு தூங்கி வழியும் திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களிலும் 01.08.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:30 மணி அளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் தலைமைலான அணியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில், தேனியில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் இணைந்து கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அவர்கள் பங்கேற்க உள்ளார்.
தமிழக முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த கழக மாவட்டத்தைச் சார்ந்த தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக ஓ.பன்னீர்செல்வம் அவர்களது அணியினருடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TTV participates in OPS team protest regarding KodaNadu case