'முதல்வர் வேட்பாளரை மாற்றினால் இணைய தயார்': டிடிவி தினகரன் நிபந்தனை..!
TTV Dhinakaran says he is ready to join if the CM candidate is changed
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால், மீண்டும் கூட்டணியில் இணையத் தயார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அத்துடன், அமைதிப் பூங்காவாக இருக்கும் தென் தமிழ்நாட்டை சீர் குலைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 07 மாதங்கள் மட்டுமே உள்ளநிலையில், அரசியல் காட்சிகள், கூட்டணி கட்சிகளில் இணைதல், தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல் என களமிறங்கியுள்ளன. அதன்படி, தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த என்டிஏ கூட்டணிக்கு தழிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தான் தலைவர் என்று அமித்ஷா அறிவித்தார். இதன்பின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக சில சர்ச்சைகளை உருவாக்கினாலும், தற்போது எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர் என்று தொடர்ந்து கூறி வருகின்றார்.

அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு இடம் அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த போது, அதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதனால் அமமுகவை சேர்த்துக் கொள்ளும் எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்ததாக புரிந்து கொள்ளப்பட்டது. அத்துடன், டிசம்பர் இறுதியில் இந்த கூட்டணி உறுதியாக வாய்ப்பு எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் திடீரென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தவரை கூட்டணி கட்சிகளை சரியாக கையாண்டதாகவும், நயினார் நாகேந்திரனுக்கு கையாள தெரியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

இதனால் நயினார் நாகேந்திரன் மற்றும் டிடிவி தினகரன் இடையில் மோதல் ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசுகையில் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால், மீண்டும் கூட்டணியில் இணையத் தயார் என்றும், அதிமுகவை ஒருங்கிணைக்க அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அமைதிப் பூங்காவாக உள்ள தென் தமிழ்நாட்டின் அமைதியை சீர் குலைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார் என்று விமர்சித்துள்ளதோடு, சமரசம் பேசுவதாக கூறி இருக்கும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dhinakaran says he is ready to join if the CM candidate is changed